ஊரடங்கு நேரத்திலும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!

முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்கும் வகையில் காலி கிங்தோட்டை பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு மற்றும் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பிட்டிய வீதியிலுள்ள வீடு மற்றும் ஹிரிம்புர பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எம்.கே.எம் ரஸ்மி என்ற பிரதேசவாசி கூறியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அம்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஹிரிம்புர பகுதியிலுள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிங்தோட்டை – கொழும்பு வீதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலால் பள்ளிவாசலுக்கு பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என எம்.கே.எம்.ரஸ்மி கூறியுள்ளார்.


நேற்று முன்தினம் 17 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தொன்றை அடுத்து மோதல் ஆரம்பமாகியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 19 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் தாக்குதல்தாரிகள் உள்வீதிகள் ஊடாக கிராமபுறங்களுக்குள் பிரவேசித்துள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த தாக்குதல்களில் 30 வீடுகளும் 11 வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் எம்.கே.எம் ரஸ்மி, முஸ்லீம் மக்களின் கிராமங்களின் உள்ள வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை காலி கிங்தோட்டை பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

கிங்தோட்டை, குருந்துவத்தை, மஹகப்புகல வெலிபிட்டிமோதர, ருக்வத்தை மற்றும் பியதிகம ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கிங்தோட்டைப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த அமைதியின்மை முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அமைதியின்மை ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐவர் காயமடையக் காரணமாக வீதி விபத்தொன்றை அடுத்து ஜிங்தோட்டை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்த அமைதியின்மையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.