உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு இம்மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

இதற்கமைய, நாடு முழுவதும் மொத்தமாகவுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், 276 பிரதேச சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 24 மாநகர சபைகள் என்பன வரும் 2018 பெப்ரவரி 15ஆம் நாள் தொடக்கம் இயங்கத் தொடங்கும் என்றும் வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மொத்தமுள்ள 8,356 உறுப்பினர்களில், 3,840 உறுப்பினர்கள் நேரடியாக வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

நாடு முழுவதும் இருந்து 4516 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். இந்தக் கலப்பு தேர்தலில் 25 வீதமான பெண் வேட்பாளர்கள் இல்லையாயின் அந்தக் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து கருத்து வெளியிட்ட இலங்கை தேர்தல் ஆணையத்தின், மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட்,

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இம்மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும், வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர் தேர்தல் நாள் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.