மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மன்னாரில் இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல்!!

மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த மாதம் 17ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக குறித்த பிள்ளையார் சிலை புனரமைப்பு செய்யப்பட்டு இந்து மக்களினால் மீண்டும் குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் சுமார் ஒரு மாத காலத்தில் மீண்டும் குறித்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை மன்னார்-யாழ் பிரதான வீதிஇநாயாற்று வழி சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும் மூன்றாவது தடவையாக உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் உயிலங்குளம்-பள்ளமடு பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, ஆண்டாங்குளம் சந்தியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை என மூன்று பிள்ளையார் சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை மாந்தை தேவாலயத்தின் உண்டியல் கதவு திறக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையார் சிலைகள் உடைப்பு, தேவாலயத்தின் உண்டியல் உடைப்பு மற்றும் மூன்று இடங்களில் காணப்பட்ட பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டமை தொடர்பில் மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் பொலிஸார் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் சிலைகள் உடைப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.