பாண்டிருப்பில் சுனாமியின் போது காணமல் போன மகனைத்தேடி 13 வருடங்களாக அலையும் ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை

செ.துஜியந்தன்

' என்ட மகன் என்னத்தேடி வருவான் அந்தக் காளியம்மன் எங்களக்கைவிட மாட்டாள். அம்பாரை கொஸ்பிட்டலில் இருந்த மகன யாரோ கூட்டித்துப்போயிற்றாங்க. மகன் சீனு காணாமப் போக்குள்ள அவனுக்கு பதினொரு வயசு இப்ப மகனுக்கு இருபத்திமூன்று வயசாகுது. என்னட மகன உயிரோட கண்ட ஆட்கள் பலர் இருக்காங்க. மகன் இருக்கான் என்றத்துக்கான ஆதாரம் பல எங்களிட்ட இருக்குது. இந்தப் பன்னீரெண்டு வருசமா மகனத்தேடித்து இருக்கிறம். இந்தவருசம் மகன் நிச்சயம் எங்களத்தேடி வருவான்.' மிகுந்த நம்பிக்கையோடு கும்பிட்டகையுடன் கடவுளை வேண்டியபடி என்னிடம் பேசினார். சிவலிங்கம் ஜெயந்தினி. 

கடந்த 2004 டிசம்பர் 26 இல் உலகமே பேரழிவைச் சந்தித்த நாள் அமைதியாக ஆர்ப்பரித்த கடல். அகோரமாய் பொங்கியெழுந்து ஊருக்குள் புகுந்து ஊழித்தாண்டவம் ஆடியதை யாரால்தான் மறக்கமுடியும். பன்னீரெண்டு வருடங்கள் கடந்து விட்டபோதிலும் அது ஏற்படுத்திச் சென்ற வலிகளும், வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களை விட்டு அகலவில்லை. இலங்கையின் கரையோரப்பகுதிகளை உலுக்கிய சுனாமி அரக்கனால் ஒரே நாளில் 36594 உயிர்கள் பறிக்கப்பட்டும், காணாமல் போயுமிருந்தனர். 

கடல் ஊருக்குள் வருகிறது என்ற செய்தி பலருக்குப் புதினமாக இருந்ததால் புதினம் பார்க்கச் சென்ற பலர் சுனாமி அலையில் சிக்கியிருந்தனர். இலங்கையில் அம்பறை மாவட்டமே இச் சுனாமி தாக்கத்தினால் அதிகமான இழப்புக்களைச் சந்தித்திருந்தன. இங்கு மட்டும் 4216 பேர் உயிரிழந்தும், காணாமல் போயுமிருந்தனர். 21201 வீடுகள் முற்றாகச் சேதமடைந்திருந்தன. புல்லாயிரக்கணக்கான சொத்திழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. 
இவையெல்லாவற்றிற்கும் மேலதிகமாக மக்கள் மத்தியில் மறக்கமுடியாத பல சம்பவங்களையும் சுனாமி விட்டுச் சென்றுள்ளது. அன்றைய காலத்தில் கல்முனையில் சுனாமி அடித்து இரு நாட்களின் பின் குப்பையில் கிடந்து கண்டு பிடிக்கப்பட்ட சுனாமி பேபி அபிஷேக் பற்றியும் அக்குழந்தைக்கு பலர் உரிமை கொண்டாடிய கதையும் உலகம் அறிந்த கதை. 

நாம் அறியாத கதையும் பலவுண்டு. சில உண்மைகள் கற்பனைகளை விடப்பயங்கரமானது. 2004ல் சுனாமியின் போது தனது மகனைத் தொலைத்துவிட்டு இன்று வரை தேடியலையும் பெற்றோரின் பரிதாப நிலைபற்றிச் சொல்லப்போகின்றேன். ஒருவர் காணாமல் போயிருந்தால் அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றித்தெரியாது பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுனாமியின் போது காணாமல் போன மகன் எங்கேயோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மை தெரிந்தும். மகன் கிடைக்காத விரக்தியில் தமது வாழ் நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் இந்தப் பெற்றோரின் பரிதாபம் சொல்லிமாளாதவை. இதனைப்படிப்பவர்கள் இப்பெற்றோருக்கு அவர்களது மகன் பற்றிய தகவல் தெரிந்தால் அதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் பிரிவல்p பாண்டிருப்புக் கிராமத்தில் வசிப்பவர்கள். சிவலிங்கம் ஜெயந்தினி தம்பதிகள். 2004 டிசம்பர் 26ல் பொங்கியெழுந்த கடல் இவர்கள் குடும்பத்தையும் சிதறடித்திருந்தது. அன்று காலை வீட்டுக்கு அருகிலுள்ள அடுத்ததெருவில் பிஸ்கட் வாங்கச்சென்ற பதினொரு வயது சிறுவன் கிரிஷhந் (சீனு) கடல் வருகுது என்று ஒடிவந்தவர்களின் பின்னால் இவனும் பிரதான வீதிநோக்கி ஒடியுள்ளான். இவ்வேளையில் இடறிப்பட்டு வீழ்ந்ததில் தலையிலும், காலிலும் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பின் அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு கிரிஷhந் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளான். சிவலிங்கம் ஜெயந்தினியின் மகன் சீனு அம்பறை வைத்தியசாலையில் இருந்ததை பலர் கண்டுள்ளனர். 

அன்று நடந்த சம்பவம் பற்றி கிரிஷhந்தின் தாய் ஜெயந்தினி கண்ணீருடன் என்னிடம் கூறினார்

' பசிக்குதம்மா என்ட மகன கடைக்கு பிஸ்கட் வாங்க அனுப்பியிருந்தன் அப்பதான் கடல்வருகுது கடல்வருகுது என சனம் கத்தித்து ஒடியதுகள். நானும் மகளும் ஒடினம். கடைக்குப் போன மகனும் சனத்தோட சனமா ஒடியிருக்கான் ஒடக்குள்ள விழுந்தயிடத்தில தலையிலும், காலிலும் சின்னக்காயம் ஏற்பட்டிருக்கு. கல்முனைக் கொஸ்ப்பிட்டல்ல மகன் நின்றிருக்கான். அவன அம்பாறை கொஸ்பிட்டலுக்கு ஏற்றக்குள்ள எங்கட சொந்தக்காராக்கள் பலர் கண்டிருக்காங்க. இருபத்தி ஏழாம் திகதி மகனத்தேடி அம்பாறக் கொஸ்பிட்லுக்குச் சென்றன். அங்க நோட்டீஸ்வோட்டில ஏழாம் வாட்டில் மகன் ;இருக்கிறதா மகன்ட பேர் போட்டிருந்தாங்க. வாட் எல்லாம் தேடிப்பாத்தன் மகனக் ;காணல்ல. திரும்பபோய் ஒ.பி.டியில கேட்டன். இங்க இடம் காணாது எண்டு கொஞ்சப்பேர இக்கினியாகல கொஸ்பிட்டலுக்கு கொண்டுபோயிருக்கு எண்டு சொன்னாங்க. அங்கையும் போய்பார்த்தன். அங்கும் மகன் இல்ல. அம்பாறையில வாட்டில இருந்த நேரம் என்ட மகன யாரோ கூட்டித்துப் போயிற்றாங்க. என்ட மகன் எங்கேயோ உயிரோட இருக்கான். அவன் எங்களத்தேடி வருவான்.' என விம்மலும், விசும்பலுமுடன் அந்த தாய் அழுதாள். 

இந்நேரம் அவரது கணவன் சிவலிங்கம் சவுதியில் இருந்துள்ளார். சுனாமி செய்தி கேட்டு இரண்டு நாட்களில் நாட்டுக்கு ஒடிவந்து சேர்ந்தார். சிதறிப்போயிருந்த மனைவியையும், மகளையும் தேடிக்கண்டுபிடித்து ஒன்று சேர்த்திருந்தார். அதன்பின் தனது மகனைத்தேடும் படலத்தை ஆரம்பித்தார். சிவலிங்கம் மகன் பற்றியதேடலை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை மகன் பற்றிய திடுக்கிடும் பல செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளதாக சிவலிங்கம் கூறுகின்றார். 

'சுனாமிக்குப் பயந்து தப்பியோடிய மகனுக்கு கல்முனைக் கொஸ்பிட்டலில் மருந்து கட்டியிருக்காங்க. 2004.12.26ஆம் திகதி பகல் 12..30 மணிக்கு அங்கயிருந்து அம்புலன்ஸ்சில அம்பாறைக் கொஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. என்ட மகன அம்புலஸ்சில தான் ஏற்றித்துப்போன எண்டு கொஸ்பிட்டல்ல வேலை செய்த அக்காவும் சொன்னவ. நான் அம்பாறைக்குப் போய் மகனப்பற்றிக் கேட்டன். இங்க கொண்டுவந்த ஆட்கள கண்டி, பதுளை, மாத்தள, இக்கினியாகல, வெட்டினாகல, கோணாகல போன்ற கொஸ்பிட்லுக்கு ஏற்றியிருக்கிறதாச் சொன்னாங்க. அங்கயெல்லாம் போய்ப்பார்த்தன். என்ட மகனக் காணல்ல. பொலிஸ், மனிதஉரிமைக்குழு எல்லாயிடத்திலையும் முறைப்பாடு செஞ்சன். திரும்பிவந்து அம்பாறக் கொஸ்பிட்டல்ல பதிவுப்புத்தகத்தக் காட்டச் சொல்லி சண்டபிடிச்சன். அதில மகன்ட பேர் இருந்துச்சு. பிறகு அத மாற்றிப்போட்டாங்க. அம்பாறக் கொஸ்பிட்டல்ல வைச்சுத்தான் மகன் காணாமப் போயிருக்கான். டிசம்பர் 26 ஆம் திகதி ஏழாம் வாட்டில் வைச்சு கல்முனக்குடியைச் சேர்ந்த மஜீத் என்பவர் என்ட மகனுக்கு சோடா வாங்கிக் கொடுத்ததாச் சொன்னவர். மகன் நல்லாத்தானிருந்திருக்கான். அவன யாரோ கூட்டித்துப்போயிருக்காங்க. மகனக்கண்டா சொல்லுங்க எண்டு பத்திரிகையில விளம்பரம் கொடுத்திருந்தம். அதப்பார்த்திட்டு யாரோ எங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தாயிருக்குது. அந்தக் கடிதம்' என்றவாறு அக்கடிதத்தை என்னிடம் நீட்டினார். 

பாண்டிருப்பைச் சேர்ந்த சிவலிங்கம் கிரிஷhந் சுனாமியின் போது காணாமல் போயிருந்ததாக பத்திரிகை மூலம் அறிந்து கொண்டேன். உங்களது குழந்தை அம்பாறை வைத்தியசாலையில் 07 ஆம் வாட்டில் தலையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டு நல்லசுகதேகியாக இருந்துள்ளார். இவனையும், இன்னும் சில குழந்தைகளையும் வைத்திய அதிகாரியும், மெனிக்கே சிஸ்டர் என்று சொல்பவரும், தலைமை இலிகிதர் பிரான்ஸ்சிஸ் என்பவரும் இன்னும் தமிழ்தெரிந்தவர்களும் பார்வையிட்டுள்ளனர். 

தற்போது அதிக குழந்தைகள் வீரகொட எனும் இடத்திலும், அம்பாறை வைத்தியசாலையைச் சுற்றியுள்ள இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இரகசியமாக அறிந்து கொள்ளுங்கள். வைத்திய அதிகாரிகளை தொந்தரவு படு;த்துங்கள்.எப்படியும் குழந்தைகள் கிடைக்கும். எனக் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மீண்டும் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சிவலிங்கம் அம்பாறை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை திட்டியும், எச்சரிக்கை செய்தும் அனுப்பியுள்ளனர். சுனாமியின் போது பல சிறுவர்கள் அக்காலத்தில் காணாமல் போயிருந்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் சிங்களப்பகுதிகளில் பிக்குவாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பிள்ளைகள் இல்லாதவர்களும் பிள்ளைகளைத் திருடிச்சென்றிருந்தனர். உயிரோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மகன் சீனு திடீரென காணாமல் போனதை நினைத்து நித்தம் கண்ணீருடன் பித்துப் பிடித்தவர்கள் போல் சிவலிங்கம் தம்பதியினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

மகனைப்பற்றிய செய்திகள் இடையிடையே அவர்கள் காதுகளுக்கு கிடைத்தவண்ணமேயுள்ளது. பதின்மூன்று வருடங்களாய் தொலைத்த மகனைத் தேடி அலைகின்றனர். அவன்வருவான் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

'நாங்க கேட்காத சாஸ்திரமில்ல, போகாத இடமில்ல. எல்லாயிடத்திலையும் உங்களத்தேடி மகன் வருவான் எண்டுதான் சொல்லுறாங்க' இந்தச் சனிமாற்றம் தங்களுக்கு நல்லதைத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். 

காணாமல் போன மகன் இந்த வருடமாவது வீடு வந்து சேர வேண்டும் என பாண்டிருப்பு காளியம்மன் கோவில் சென்று தேங்காய் உடைத்து வழிபட்டனர். . இவர்களின் நம்பிக்கை வீண் போயவிடக்கூடாது. இவர்களது மகன் சீனு பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள் அங்கலாய்க்கும் இப் பெற்றோருக்கு வழிகாட்டலாம். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.' கவலைப்படாதீர்கள் எனக்கூறிவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

No comments

Powered by Blogger.