இன்றும் ஆஜராகாத ரணில், மைத்திரி: 3வது முறையாகவும் வழக்கு ஒத்திவைப்பு!!


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மூன்றாவது முறையாகவும் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

வழக்கின் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்றைய தினமும் நீதிமன்றத்திற்கு வராமையே இதற்குக் காரணம் என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக, போலி ஆவணங்களை வௌியிட்டமையால், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாக, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

முன்னதாக இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், குறித்த வழக்கு இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. 

எனினும், இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, மைத்திரி மற்றும் ரணில் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறுவதால் தனது கட்சிக்காரர்களால் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். 

எனவே, இதன்பொருட்டு பிறிதொரு தினத்தை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார். 

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

அத்துடன், அன்றையதினம் மைத்திரி மற்றும் ரணிலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, இம் மாதம் 10ம் திகதி முதல் 30ம் திகதி வரை அவுஸ்திரேலியா செல்ல திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதியளித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.