கூட்டமைப்பின் பிளவினைத் தடுக்க களமிறங்கிய பிரதமர் ரணில்!!

Image result for ranill sampanthan sri lanka
கூட்டமைப்பின் பிளவினை உடனடியாக சீர்செய்யுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவர் இரா.சம்பந்தனிற்கு பணித்துள்ளார்.

இன்று காலை தொலைபேசி வழியே தொடர்புகொண்ட அவர் தற்போதைய பிளவுகள் தொடர்பில் உரையாடியதுடன் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவும் பணித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்களது தொலைபேசிகள் செயலிழந்துள்ளதாக யாழ்ப்பாணத்து ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகிய இருவரதும் தொலைபேசிகளே செயலிழந்துள்ளன.

ஈபிஆர்எல்எவ் ஏற்கனவே தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து தனிப்பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது.

மறுபுறம் ரெலோவும் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களில் புளொட்டும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி பிரிந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் , புதிய ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னாள் போராளிகளின் ஒரு பகுதியினர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்தில் ஒன்று கூடி கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்றைய தமிழரசுக்கட்சியுடனான குழப்பத்தின் பின்னர் ரெலோ கட்சி வெளியேறியிருந்த நிலையில், ஏற்கனவே ஆனந்த சங்கரியுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அக்கட்சியின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரிலான கட்சியில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் சிவகரன் , ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் இன்றைய கூட்டணி அலுவலக சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியுடனான பேரத்திற்கு டெலோ மற்றும் புளொட் என்பவை தற்போதைய சூழலை பயன்படுத்தலாமென சந்தேகங்களும் உள்ளது.

குறிப்பாக கூடிய ஒதுக்கீட்டை பெற இம்முயற்சிகள் பயன்படலாமென சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

டெலோவின் முடிவை தொடர்ந்தே தனது முடிவை அறிவிப்பதாக நேற்று சித்தார்த்தன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகிய இருவரதும் தொலைபேசிகள் செயலிழந்துள்ளன.

No comments

Powered by Blogger.