சர்வதேச தேயிலை தினம் இருப்பது எங்களுக்கு தெரியாது!!

சர்வதேச மட்டத்திலான தேயிலை தினம் இன்றைய தினம் இலங்கையில் பல மாவட்டங்களிலும் அனுஷ்க்கப்பட்டது. 

இதன்பொருட்டு பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்களை பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும், அபிவிருத்தி காணாதவர்களாக வாழ்ந்து வருவதாக பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. 

மலையகத்தில் அதிகமானவர்கள் தேயிலை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்து வருவதோடு, இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் கூட அற்ற நிலையில் பல்வேறுப்பட்ட விடயங்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு இன்றையதினம் தேயிலை தினமாக கொண்டாடுகின்ற போதிலும், இவ்வாறான தினம் ஒன்று இருப்பதாக தமக்கு தெரியவில்லை என இவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். 

நாட்டில் ஏனைய தொழில்களை மேற்கொள்பவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்கின்ற போதிலும், தாம் பாதுகாப்பற்ற ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலோடு, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், மரம் முறிந்து வீழ்தல், மின்னல் தாக்குதல், விஷ பாம்பு கடி என பல்வேறுப்பட்ட துன்பங்களோடு தொழிலை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கடினமாக உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்கு கூட பல போராட்டங்கள் செய்து கறுப்பு கொடிகளை பிடித்த போதிலும் தமக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் மலையக அரசியல் தலைமைகளும், அரசாங்கமும் தம்மைப் பற்றி கவனம் செலுத்துவதில்லை எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதேவேளை பசி, பட்டினியோடு வேலை செய்தும் உறங்குவதற்கு கூட முறையான வீட்டு வசதி அற்ற நிலையிலும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அவர்களின் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பின்னடைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தேயிலை தினத்தில் தமக்கு விடுமுறை வழங்கி பூஜைகள் அல்லது பிராத்தனைகள் செய்வதற்கு கூட தகுதியற்றவர்களாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல்வாதிகளும் அக்கறை காட்டவில்லை என மக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தினர். 

No comments

Powered by Blogger.