ஈழத்தில் நிலவும் சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!


இலங்கையில் உள்நாட்டு போருக்கு பின்னர் நிலவி வரும் சமூகப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கொழும்பு எழுத்தாளர் தி. ஞானசேகரன் கூறினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற ஈழத்து இலக்கியக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் நடந்த இறுதி யுத்தத்திற்கு பிறகு 10 லட்சம் பேர் ஈழத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

மனித வாழ்வில் இடம்பெயர்தலை விட கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை. தற்போது உலகெங்கிலும் இருந்து பலர் ஈழத்து எழுத்தாளர்கள் என்ற பெயரில் எழுதி வருகின்றனர்.

அவர்கள் எல்லாரும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சிகள். புவியியல், வாழ்வியல் மற்றும் பண்பாட்டின் அடிப்படையிலேயே இலக்கியங்கள் அமையும். ஆனால், ஈழத்து இலக்கியம் இரு வகைப்படும்.

போருக்கு பின்னாலும் அங்கேயே வாழ்ந்து வரும் மக்கள் படைக்கும் இலக்கியம், புலம் பெயர்ந்தவர்கள் படைக்கும் இலக்கியம் என இருவகையாக உள்ளன.

ஈழத்தின் பண்பாடு கலாசாரத்தைப் பிரதிபலித்த இலக்கியங்கள் தற்போது போர் இலக்கியமாகவும், அகதி இலக்கியமாகவும் மாறி வருகிறது. இதுபோன்ற இலக்கியப் படைப்புகளின் பாடுபொருளாக பண்பாட்டுச் சீரழிவு, இடம் பெயர்தலின் வலி ஆகியவையே உள்ளன.

போரினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இலக்கியப் படைப்புகளை வலி நீக்கும் நிவாரணியாகப் பார்த்து வருகின்றனர். தாங்கள் அடைந்த இன்னல்களைப் படைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாகவே தோன்றும். ஆனால், போருக்கு பின்னர் அங்கு ஏற்பட்ட சமூக பிரச்னைகள் குறித்து வெளி உலகத்தவர் யாருக்கும் தெரிவதில்லை.

ஈழத்தில் நிலவும் சமூகப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இன அழிப்புக்கு பின்னர், புத்த மத திணிப்பு, ராணுவ அட்டூழியங்கள் என அனைத்தையும் சகித்து வாழும் ஈழத்து மக்களுக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றார்.

எழுத்தாளர் வி. ஜீவகுமாரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தி.சு. நடராஜன், மாநிலச் செயலர் பா. ஆனந்தகுமார், மாவட்டத் தலைவர் கவிஞர் மு. செல்லா, பேராசிரியர் செ. போத்திரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.