மட்டக்களப்பில் புலம் பெயர் எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு

செ.துஜியந்தன்

பெண்ணியம் பற்றி பேசுவது என்பது வேண்டப்படாத ஒன்றாகவே இன்றும் பார்க்கப்படுகின்றது!

பெண்ணியம் பற்றி பேசுவது என்பது வேண்டப்படாத ஒன்றாகவே இன்றும் பார்க்கப்படுகின்றது. வெறுமேனே பேச்சுக்காக மட்டும் பெண்ணியம் பற்றி பேசும் நிலையே தொடர்கின்றது. சகல இடங்களிலும் ஆணாதிக்கம் நிறைந்திருக்கின்றன. பெண்கள் ஆணாதிக்க சிந்தனையை உடைத்து அதிலிருந்து வெளியே வரவேண்டும். 

இவ்வாறு பெண்ணியச் செயற்பாட்டாளர் எஸ்.ரி.நளினி ரட்ணராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமும் கட்டியம் ஆற்றுகை குழுவும் இணைந்து நடாத்திய புலம் பெயர் எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் பற்றிய நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் மேரா தலைமையில் நடைபெற்றது. 

இந் நூல் பற்றிய அறிமுகத்தினை எஸ்.ரி.நளினி ரட்ணராஜா, த.மலர்ச்செல்வன், து.கௌரீஸ்வரன் இ.கலைமகள், சு.ரூபேஷன் ஆகியோர் நிகழ்த்தினார்கள். ஏற்புரையினை எழுத்தாளர் மீராபாரதி நிகழ்த்தினார்.
இங்கு நூல் அறிமுகவுரை ஆற்றிய பெண்ணியச் செயற்பாட்டாளர் எஸ்.ரி. நளினி ரட்ணராஜா அங்கு மேலும் தெரிவிக்கையில்....

எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் பற்றிய நூலானது பெண்களுடைய பாலியல் ரீதியான பிரச்சினைகளையும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் இடர்பாடுகளையும் மிகவும் வெளிப்படையாகப் பேசுகின்றது. இவ்வாறு வெளிப்படையாக பாலியல் சார்ந்து ஏற்படுகின்ற பிரச்சினைகளை பேசுகின்ற நூல்கள் வெளிவருவது மிகக் குறைவாகும். அவ்வாறான நூல்களை வெளியிடுபவர்களை சமூகம் அருவருப்பானவர்களாகவும், சமூகத்தில் வேண்டப்படாதவர்களாகவும் நோக்குகின்றனர்.

இன்று பாலியல் ரீதியான விழிப்புணர்வுகள் மாணவர்களிடத்தும், மக்களிடத்தும் இல்லாததின் காரணமாகவே பல்வேறு துஷ;பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாலுறவு என்பது தியானம் போன்றது. இதனை கீழ்த்தரமாக பேசக்கூடாது கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த பாலுறவில் ஏற்படும் பிரச்சினைகளே காரணமாக இருக்கின்றன. இதனை எவரும் வெளிப்படுத்துவதில்லை. அதைப்பற்றிய அறிவில்லாமலே நாம் வாழ்கிறோம். இந் நிலையில் எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் பற்றி பேசுகின்ற நூலானது இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானதாகும். பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு இந் நூல் வழிகாட்டியாக அமையும் என நினைக்கிறேன் என்றார்.

No comments

Powered by Blogger.