ஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு - வாகன சாரதிகள், சுற்றுலா பயணிகள் அவதானம்!!

பதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் ஒஹிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வளைவுப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

சீரற்ற காலநிலையினால் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன. 

ஹோட்டன் சமவெளி காட்டுப் பகுதியில் அதிக காற்று வீசும் பொழுது மரக்கிளைகள் முறிந்து விழுவதனால் அந்த பாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதானத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தோடு வீதியை ஒரு வழி போக்குவரத்தாக சீர் செய்துள்ள போதிலும், வீதி வழுக்கல் தன்மையுடன் இருப்பதாகவும் தெரியவருகின்றது. 

குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே ஒரு பஸ் சேவை ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிக மண்சரிவு காரணமாக குறித்த பஸ் சேவை ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பஸ்ஸிலும், புகையிரதத்திலும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் அந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவு ஆகியவற்றை பார்வையிடுவதற்கு குறித்த வீதியே பயன்படுத்த வேண்டியுள்ளது. 

ஆகையால் மாற்று வழிகள் இன்மையால் பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.