மட்டக்களப்பில் ‘கொக்குத்தீவு’ பறவைகள் சரணாலயம், தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது


மட்டக்களப்பில் ‘கொக்குத்தீவு’ என அழைக்கப்படும் பறவைகள் சரணாலயம், இனந்தெரியாதவர்களால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக காணப்படும் கொக்குத்தீவு, மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் குறித்த பகுதிக்கு விசமிகள் தீமூட்டியுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்குசென்ற பாலமீன்மடு பொலிஸ்காவலரண் பொலிஸார், கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர், மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் கிராமிய மீனவ சங்கத்தினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

எனினும், இனப்பெருக்கத்திற்காக பறவைகள் இட்ட முட்டைகளும் பறவைக் குஞ்சுகளும் தீயில் கருகி சாம்பராகியுள்ளன.

குறித்த பறவைகள் சரணாலயத்திற்கு அதிகளவிலான அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்வதாகவும், குறிப்பாக நொவம்பர் மற்றும் டிசம்பர் காலப்பகுதியில் அதிகளவிலான பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இவை தற்போது தீயில் கருகியுள்ளன.

இந்த நாசகார வேலையைச் செய்தவர்கள் தொடர்பாக, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமும் மட்டக்களப்பு பொலிஸாரும் தீவிரவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.