சாவகச்சேரி வேட்பு மனுத் தாக்கலில் மோதல்; சயந்தன் மீது தாக்குதல்; வேட்புமனுவில் சாரதி!!

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது. 

தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் அருந்தவபாலன் ஆத்திரத்தின் உச்சத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தனை கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் (ஹெல்மட்) தாக்கியுள்ளார். 

வேட்பு மனுத் தாக்கலுக்காக இறுதி நாளான நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மார்டின் வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடியபோதே இந்த குழப்பங்கள் இடம்பெற்றன. 

தான் தயாரித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்ட பலர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டதை அறிந்து குழம்பிய அருந்தவபாலன், தனது பட்டியலில் உள்ளடக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். 

12 மணிக்கிடையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான நேரம் நெருங்கும் நிலையில் அருந்தவபாலன் ஆதரவாளர்களுடன் வெளியேறியதால் சிக்கல் ஏற்பட்டது. 

பட்டியலுக்கான உறுப்பினர் தொகை போதாத நிலையில் அருந்தவபாலனை சமரசம் செய்ய சயந்தன் முயன்றார். அருந்தவபாலன் காருக்குப் பின்னால் ஓடிய சயந்தன் அவரை நிறுத்த முற்பட்டார். 

இதன்போது இழுபறி ஏற்பட்டது. ஆத்திரத்தில் இருந்த அருந்தவபாலன் சயந்தன் மீது கையில் வைத்திருந்த ஹெல்மட்டால் தாக்கினார். இதன்பின் அருந்தவபாலன் தனது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். 

இந்நிலையில் பட்டியலுக்கு ஒருவர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்போது அங்கு நின்ற சாரதியை பட்டியலில் உள்ளடக்கி மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் வந்துவிடவே அவரை உள்ளடக்கி 11.50 மணியளவில் அவசர அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

No comments

Powered by Blogger.