அமெரிக்காவின் ஆதரவினை இலங்கை முற்றாக இழக்கும் நிலை!


ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கடந்த வியாழக்கிழமை கூட்டப்பட்ட 10வது அவசர விஷேட கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.

இலங்கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்பரிய மற்றும் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி வாக்களிப்பில் வாக்களித்ததாக அரசாங்கம் உத்தியோபூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

இந்நிலையில் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று இராஜதந்திர தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்குகின்ற நாடுகளில் அமெரிக்கா முதன்மையான நாடாகும். இலங்கையில் முதலீடுகள், வர்த்தகம் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் நிமித்தம் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 39.8 மில்லியன் நிதியை அமெரிக்கா ஒதுக்கியது.

அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் இயங்கும் மைத்திரி - ரணில் அரசுக்கு அமெரிக்கா அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வழங்கும் என தெற்காசிய பிராந்தியத்துக்கான துணைச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த ஆண்டில் மாத்திரம் அமெரிக்கா பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் 23.83 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியிருந்தது.

இதனைத் தவிர சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடன் மற்றும் செயற்திட்டங்களின் அடிப்படையில் 1562 மில்லியன் டொலர்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு நோக்கங்களுக்கானநன்கொடை நிதியாக சுமார் 22 மில்லியன் டொலர்கள் வரையில் வழங்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளாலும் ஜெருசலேம் பகிரப்பட வேண்டும் என்ற பலஸ்தீனர்களதும் இஸ்ரேலியர்களதும் நியாயபூர்வமான அக்கறைகளைக் கவனத்திற் கொண்டும் அமெரிக்காவுக்கு அதிருப்தியளிக்கும் வகையில் இலங்கை வாக்களித்தது.

ஜெருசலேம் தொடர்பில் ஐநா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை அமெரிக்காவுக்கு எதிரான விடயமாக காணப்படுகின்றமையினாலேயே இலங்கைக்கான எதிர்கால ஒத்துழைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சநிலை உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டு விடயங்களிலும் அமெரிக்காவின் பங்களிப்புகள் தீவிரமாக காணப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு எதிர்காலத்தில் இலங்கை - அமெரிக்காவுக்கு இடையில் புரிந்துணர்வை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பேச்சுக்களை துரிதப்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.