தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியது தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ப்ளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒதுங்கியுள்ளது.

இந்த உள்ளாட்சி மன்றங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியுடன், டெலோ மற்றும் பளொட் ஆகிய கட்சிகள் முன்னர் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தன.

இதன்படி உள்ளாட்சி சபையில் தலைவராக பதவி வகிக்கக்கப் போகும் தமிழரசு கட்சிக்கு 60 சதவீத ஆசனங்களும், ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 20சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் இன்று குறித்த இரண்டு கட்சிகளுக்கும் கிளிநொச்சியில் உள்ள கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் தலா ஒரு ஆசனமே வழங்கப்படும் என்று தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ப்ளொட் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை இது குறித்து எமது செய்திச் சேவை வினவிய போது, போட்டியில் இருந்து விலகும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக எமது செய்தி சேவை இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொலைபேசி அழைப்பு பொறுப்பேற்கப்படவில்லை.

No comments

Powered by Blogger.