தேர்தலில் பாதாள உலகக்குழுக்கள்?


இதற்கு முன்னர் மக்கள் பிரதிநிதிகளான நபர்கள் பின்னாளில் குற்றவாளிகளாக மாறியதாகவும் இம்முறை பெயர் பெற்ற குற்றவாளிகள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளமை முன்னைய நிலைமையை விட அபாயகரமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புகள் மட்டுமல்லாது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும் இது பற்றி நேரடியாக கூறியுள்ள போதிலும் ஏழு முதல் எட்டு குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு இரண்டு பிரதான கட்சிகள் வேட்புமனுக்களை வழங்கியுள்ளன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் கிராமத்தின் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டால், அழிவான நிலைமை ஏற்படுமே அன்றி ஜனநாயக சூழலை எதிர்பார்க்க முடியாது.

இதனால், மக்கள் இப்படியான குற்றவாளிகளை தெரிவு செய்யக் கூடாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உதவிகளை வழங்க தயாராக இருக்கும் 10 பிரதான பாதாள உலகக்குழுக்கள் குறித்து பாதாள உலகக்குழுக்களை அடக்கும் பிரிவினர் கடும் அவதானிப்புடன் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக கொழும்பு தெற்கு பகுதியின் அரசியல்வாதிகளின் பாதுகாப்பை பெற்றுள்ள பாதாள உலகக்குழுக்களின் தலைவர்கள் தேர்தல் காலத்தில் வெளியில் வரலாம் என்ற அனுமானத்துடன் பாதாள உலகக்குழுக்களை அடக்கும் பிரிவினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பாதாள உலகக்குழு தலைவர்களான புளுமெண்டால் சங்கா மற்றும் ஆமி சம்பத் ஆகியோரை இலக்கு வைத்து, கொழும்பை சேர்ந்த முன்னணி அரசியல்வாதியின் பாதுகாப்பை பெற்றுள்ள பாதாள உலகக்குழு தலைவரான தெமட்டகொட சமிந்தவின் குழுவினர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

இம்முறை தேர்தலிலும் பாதாள உலகக்குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொலிஸாரும் அதிரடிப்படையிரும் பாதாள உலகக்குழுக்களின் நடமாட்டத்தை அவதானித்து வருகின்றனர்.

கொழும்பில் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தும் தெமட்டகொட சமிந்த, அங்கொட லொக்காவின் குழுவினர் உள்ளிட்ட சில பாதாள உலகக்குழுக்கள் மற்றும் தென் பகுதியில் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தும் மாகதுரே மதுஷ், கொஸ்கொட சுஜீ, கொஸ்கொட தாரக, அம்பலாங்கொடையை தளமாக கொண்டு இயங்கும் மேலும் சில பாதாள உலகக்குழுக்கள் பல வேட்பாளர்களுக்கு உதவ தயாராகி வருவதாக பாதாள உலகக்குழுக்களை அடக்கும் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

No comments

Powered by Blogger.