குட்டித் தேர்தலில் யானை மற்றும் தாமரை மொட்டு சமபலம்! வடக்கில் கூட்டமைப்பு ஆதிக்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வுச் சேவை இரகசிய புலனாய்வொன்றை நடத்தியிருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது.
இந்தப் புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மகிந்த அணியான கூட்டு எதிரணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஊவா மற்றும் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கூட்டு எதிரணிக்கு கூடுதலான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மற்றும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு குறைந்திருந்தாலும் அது தேர்தலில் அக்கட்சிக்கு பெரியதான தாக்கத்தை ஏற்படுத்தாதென அரச புலனாய்வு சேவை தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது என அறியமுடிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சவால்களை எதிர்கொண்டாலும் அங்கும் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருக்குமென அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாகவும் அந்தப் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அரச தேசிய பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள், உயர்மட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் இடையே மிக நுணுக்கமாக இந்த இரகசிய ஆய்வு நடத்தப்பட்டது எனத் தெரிகிறது.

இந்த அறிக்கை தேசிய பாதுகாப்புச் சபையின் வாராந்தக் கூட்டத்துக்கு ஏலவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.