'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல்? - ஜெர்மனி கடும் எச்சரிக்கை


ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 10,000 ஜெர்மனியர்களை குறிவைத்து, அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த நெட்வர்க்கிங் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது.

மேல்மட்ட ஜெர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவதாக அமைப்பின் தலைவர் ஹன்ஸ் கேயோக் மாசன் கூறியுள்ளார்.

"இது குறிப்பிட்ட பாராளுமன்றங்கள், அமைச்சகங்கள் மற்றும் அரசு அமைப்புகளில் ஊடுருவும் பெரும் முயற்சி" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற இணைய ஊடுருவல் குற்றச்சாட்டுகளை சீனா ஏற்கனவே மறுத்துள்ளது. ஆனால் ஜெர்மனின் இந்த குற்றச்சாட்டுக்கு இன்னும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

ஜெர்மனில் உள்ள 'லிங்க்ட்இன்' பயன்பட்டாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட, செயலில் இருக்கும் எட்டு சீனக் கணக்குகளை ஜெர்மன் புலனாய்வு அமைப்பு வெளியிட்டது. மற்ற பயன்பாட்டாளர்களை வசீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக்கணக்குகள், இல்லவே இல்லாத இளம் சீன நிபுணர்களை ஊக்குவிக்கும் மாதிரியும் உள்ளது.

பொருளாதார ஆலோசனை அமைப்பில் மனிதவள மேலாளராக இருப்பதாக "ஆலன் லியு" மற்றும் கிழக்கு சீனாவில் நிபுணராக இருப்பதாக "லிலி வு" போன்ற கணக்குகள் போலியானவை என ஜெர்மனிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

உயர்மட்ட அரசியல்வாதிகளை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இம்முறையை சீன புலனாய்வு பயன்படுத்துவதாக ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், "கடும் இணைய ஊடுருவல்" மூலம் "தீவிர" தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட இருந்ததை கடந்த ஆண்டு ஜெர்மனி கண்டுபிடித்தது.

குறிப்பாக ரஷிய கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படும் "ஃபேன்சி பியர்" என்ற ஹேக்கர் குழு அதிக செயல்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.