இலங்கை தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா


இலங்கை தேயிலை மீது ரஷ்யாவால் விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ரஷ்ய அரசாங்கம் இந்த தடை உத்தரவை நீக்குவதற்கு தற்காலிகமாக சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்க மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தேயிலைக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி விடயங்களை முன்வைப்பதற்காக இலங்கையின் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு நேற்று ரஷ்யா நோக்கி புறப்பட்டுச் சென்றது.


இவர்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கையின் தேயிலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து இந்த தடை நீக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த தேயிலையில் “கெப்ரா” என்ற வண்டு ஒன்று இருந்ததாகத் தெரிவித்து இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது.

இதையடுத்து, இலங்கை தேயிலை மீது விதித்துள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் புட்டினுக்கு தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் - ஸ்டீபன்

No comments

Powered by Blogger.