இந்தியாவுக்கு அடிக்கப்பட்டுள்ள இலங்கையின் எச்சரிக்கை மணி!


கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் தோல்வி. இந்தியாவுடன் இந்த ஆண்டு ஆடிய 4 தொடர்களிலும் தோல்வி. அணித்தேர்வில் அதிரடி மாற்றங்கள். புதிய கப்டன். இலங்கை அணி தரம்சாலாவில் களம் காணும் முன்பாகவே எக்கச்சக்க பிரஷர்.
இந்தத் தொடரில் இலங்கையை வைட்வாஷ் செய்தால், ஒருநாள் ரேங்கிங்கில் இந்தியா முதலிடம் பெறலாம். ‘இந்தியா நிச்சயம் முதலிடம் பெற்றுவிடும்' என்று தான் அனைவரும் நம்பிக்கையோடு இருந்தனர்.

ஆனால்.... நடந்ததோ வேறு. கத்துக்குட்டியாய் நினைத்திருந்த இலங்கையிடம் தோல்வி. படுதோல்வி. அதுவும், 112 ரன்னுக்கு ஆல் அவுட். என்னதான் ஆச்சு?

நான் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன்" - டாஸ் முடிந்ததும், இந்தியக் கப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன வார்த்தை.

இந்திய அணியின் கேம் பிளானே தவறாகத்தான் இருந்தது. ஆட்டம் நடந்தது தரம்சாலாவில். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இடம். அதனால்தான் போட்டி 2 மணி நேரம் முன்னதாகத் தொடங்கப்பட்டது.

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது, அது பந்துவீச்சாளர்களுக்குப் பாதகமாக அமையும். அதனால், சேஸிங் செய்வதையே கப்டன்கள் விரும்புவார்கள். அதைத்தான் திசாரா பெரேராவும் விரும்பியிருக்கிறார்.

ஆனால், ரோஹித்....?அணியின் பிளேயிங் லெவனைப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ரஹானே ஆட்டத்துக்குச் சேர்க்கப்படவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தது தவறில்லை. அதற்கு இதுதான் சரியான சமயம். ஆனால், அவரை எங்கு இறக்கியிருக்க வேண்டும்?

இந்தியா தடுமாறுவது 4,5-வது இடங்களில். ‘அந்த இடத்தில் யார் ஆடவேண்டும்' என்பதைத்தான் இதுபோன்ற தொடர்களில் இந்தியா தீர்மானிக்க வேண்டும்.

ஆனால், அவரை இறக்கியது கோலியின் இடத்தில். அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரஷர். அவரால் நிச்சயம் தன்னுடைய நேச்சுரல் கேமை ஆடியிருக்க முடியாது.

மிடில் ஆர்டர் பிரச்னைகளை இந்தியா தீர்க்க முற்படுவது போல் தெரியவில்லை. இந்த இலங்கை அணியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே களமிறங்கியது போல் தெரிந்தது.

எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டே அணி தேர்வு செய்யப்படுகிறது என்று ஒவ்வொருமுறையும் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத் கூறுகிறார். ஆனால், பிளேயிங் லெவன் அந்த எண்ணத்தோடு தேர்வு செய்யப்படுவதில்லை.

பௌலிங் பாண்டியாவோடு முடிந்து விடுகிறது. கேதர் ஜாதவ் இடத்தில் இன்று மனீஷ் பாண்டே! 113 ரன் டார்கட் என்பதால் ஆறாவது பௌலர் தேவைப்படவில்லை.

ஆனால், முழுமையாக 10 ஓவர்கள் வீசுமளவு பாண்டியா ரெடி என்று நம் அணியினர் முடிவு செய்து விட்டனரா? நாம் அடுத்து ஆடப்போவது தென்னாப்பிரிக்கா என்பது ரோஹித், ரவி சாஸ்திரி ஆகியோருக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை.

சரி, மேட்சுக்கு வருவோம். அணியின் 30 ரன்களாக இருக்கும்போது, பாண்டியா கூட இதுவரை களமிறங்கியிருக்க மாட்டார். ஆனால், நேற்று குல்தீப் களமிறங்கி வேண்டிய நிலை. 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து விட்டது இந்தியா.

இது, அந்த 7 பேட்ஸ்மேன்களின் அலட்சியம் என்று சொல்லிட முடியாது. திரும்பத் திரும்ப நாம் இந்திய கிரிக்கெட்டின்மீது வைத்து வரும் குற்றச்சாட்டுதான் இதற்குக் காரணம் -

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஆடுகளம்... இன்னும் இந்திய பாடம் கற்கவில்லை.

தவான் பேட்டிங். 'ஓவர் ஸ்டிக்' திசையிலிருந்து பௌலிங் செய்கிறார் மேத்யூஸ். குட் லெங்த்தில், மிடில் ஸ்டம்ப் லைனில் பால் பிட்ச் ஆகிறது.

வழக்கமான இந்திய ஆடுகளங்களில், அப்படிப் பிட்ச் ஆகும் பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும். அந்த மைண்ட்செட்டில்தான் தவானும் இருக்கிறார்.

ஆனால், கொஞ்சம் ஸ்விங் ஆகிறது. எதிர்பார்க்கவில்லை. சுதாரித்து அடிக்க முடியவில்லை. pad-ல் அடிக்கிறது. அவுட்.

இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு பூஜ்யம்!ரோஹித்... குட் லெங்த்தில் வீசுகிறார் லக்மல். மீண்டும் பந்து பேட்டுக்கு வெளியே ஸ்விங் ஆகிச்செல்கிறது.

கொஞ்சம் பௌன்ஸ் வேறு. பௌன்ஸை ரோஹித் எதிர்பார்க்கவில்லை. அவுட். இரண்டுக்கு இரண்டு! லக்மல், மேத்யூஸ் இருவரின் பந்து வீச்சிலும் அவ்வளவு துல்லியம். கொஞ்சம் கூட டைமிங் கொடுக்கவில்லை.

பெரும்பாலான பந்துகள் மிடில் ஸ்டம்ப் லைனில்தான் வீசப்பட்டன. ஆனால், இருபுறமும் அவர்கள் ஸ்விங் செய்ததில்தான் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் திக்குமுக்காடிப் போயினர்.

ஸ்விங் ஆகி வெளியே சென்ற பந்து ரோஹித்தைக் காவு வாங்கியது. இன்ஸ்விங் பந்துக்கு தினேஷ் கார்த்திக் அவுட்.

முந்தைய தொடர்களில் சொதப்பியதால், ஏற்கெனவே மனீஷ் பாண்டே மீது பிரஷர். அவர் ஆடவந்த சூழ்நிலை. அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

15 பந்துகள் ஆடிய அவரிடம், கொஞ்சம் கூட ஃபூட் மூவ்மென்டைக் காண முடியவில்லை. இவரும் லக்மலின் ஸ்விங்குக்கு பலியானார்.

ஸ்ரேயாஸ்...அதுவரை கொஞ்சம் பொறுமை காட்டியவர், நுவான் பிரதீப் வீசிய அந்தப் பந்தில் பேராசை கொண்டு அவுட் ஆனார்.

அதுவரை அவர்கள் போட்டுக் கொண்டிருந்த லெங்த்திலிருந்து மாறுபட்டு, ஃபுல் லெங்த்தில், வெளியே வீசினார் பிரதீப். கட் செய்ய நினைத்து இன்சைடு எட்ஜாகி வெளியேறினார்.

இவரைப் போலத்தான் பாண்டியாவும். அணி இருந்த நிலையில் எதற்கு அவ்வளவு அவசரம் காட்டினார் புரியவில்லை. 'இப்படித்தான் ஆடவேண்டும்' என்று எந்த பிளானும் இல்லை.

அதற்கு முன் 5 பேட்ஸ்மேன்கள் எப்படி அவுட் ஆனார்கள் என்ற சிந்தனையும் இல்லை. அவற்றையெல்லாம் யோசித்து, ஒரு மெச்சூர்டு இன்னிங்ஸ் ஆடும் வரை, சிறந்த ஆல்ரவுண்டர் ஆகிட முடியாது.

ஹர்டிக்! துடுப்பாட்டக்காரர்களே இப்படி வெளியேற, பௌலர்கள் அவுட் ஆனதை குறை சொல்ல முடியாது. குல்தீப் - நேற்று அணியின் இரண்டாவது பெஸ்ட் பேட்ஸ்மேன். நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

இப்படி எல்லோரும் வருவதும் போவதுமாக இருக்க, பலரும் ஓய்வு பெறச்சொன்னவர் மட்டும் ஓயாமல் நின்று ஆடிக்கொண்டிருந்தார்.

தோனி அடித்த 65 ரன்கள்தான், மிகக்குறைந்த ஸ்கோர் எடுக்காமல் இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றியது. இந்த இன்னிங்ஸ் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு மிகச்சிறந்த பாடம்.

இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகும், பிட்சின் தன்மை அறிந்த பிறகும், அதற்குத் தகுந்தாற்போல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பிட்ச் ஸ்விங் ஆவதை உணர்ந்து, முடிந்த வரை கிரீஸிலிருந்து வெளியே வந்து ஆடவே முற்பட்டார் தோனி. அவர் நிலைத்து நின்று ஆட மிக முக்கிய காரணம் இதுதான்.

மற்ற பேட்ஸ்மேன்களின் ஃபூட் வொர்க் - தர வரிசையில் கடைசி இடத்திலிருக்கும் அணி பேட்ஸ்மேன்களைப் போலத்தான் இருந்தது.

யானைக்கும் அடி சறுக்குவது போல' என்று இந்தத் தோல்வியை எடுத்துக்கொள்ள முடியாது. கோலி இல்லாததால் ஏற்பட்ட தோல்வி எனும் மூடி மறைத்திட முடியாது.

ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை, இந்தப் போட்டியும், கொல்கத்தா டெஸ்ட் போட்டியும் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டன.

இனியும், கான்பூர், நாக்பூர் ஆடுகளங்களில் ஆடும் அதே மைண்ட்செட்டோடு ஆடினால், தென்னாப்பிரிக்காவில் இந்தியா வைட்வாஷ் செய்யப்படும்.

அணியைத் தேர்வு செய்வதில் இருந்து, ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் ஆடுவது வரை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்தியா தக்குப்பிடிக்க முடியும்.

இலங்கையுடனான இந்தத் தோல்வி, வெளிநாட்டுத் தொடர்களுக்கு இன்னும் ரெடியாகாத இந்திய அணிக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி

- Vikatan

No comments

Powered by Blogger.