கோட்டாபயவை அழிக்க சதி!

அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்குள் இழுத்து அவரை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கோட்டாபயவை விமர்சித்து அண்மையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு, இன்று கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளதாக கொழும்பு சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தவிதமான போலிப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவது பிரபல வர்த்தகராவார் எனக் கூறியுள்ள மஹிந்த, இந்த சுவரொட்டி விளையாட்டுகளில் இறுதியில் கோட்டாபயவே பாதிப்படைவார் எனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாய ஓர் அப்பாவி. அவரால் இதனை எதிர்கொள்ள முடியாது. அதேசமயம் இந்த விடயத்தினை அறிந்து கொண்ட மைத்திரி தரப்பினர் கோட்டாவிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மறுபக்கம் இந்த விடயம் தொடர்பில் பசில் ராஜபக்ஷவும் கோபமடைந்துள்ளதாகவும் மஹிந்த கூறியுள்ளதாக குறித்த இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் ஒன்றினை மேற்கொண்ட போது, “கோட்டா எம்முடையவர்.. நமக்காக நாம்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அண்மையில் “கோட்டா பயம் மறந்துவிட்டதா?” என்ற சுவரொட்டிகள் கொழும்பு நகரில் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த சுவரொட்டி விடயங்கள் தென்னிலங்கை அரசியலில் பல்வேறுபட்ட விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது. அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்திற்கான யுக்தி என்ற வகையில் அரசியல் அவதானிகள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசியல் உட்பூசல்களை ஏற்படுத்த சில விஷமிகளால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வரும் நிலையில், பிரதமர் ரணிலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர் ஒருவரே இந்த செயற்பாடுகளை செய்து வருவதாகவும் மஹிந்த தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.