மூன்று முச்சதங்கள், ஐ.சி.சி-யில் முதல் இடம்... `ராக் ஸ்டார்!!'

மூன்று முச்சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர், ஐ.சி.சி சிறந்த பவுலர் தர வரிசையில் முதல் இடம், கிரிக்கெட்டின் `ராக்ஸ்டார்', குதிரைக் காதலன், `சர்'... எனப் பல அடையாளங்களைக் கொண்டவர்தான் ரவீந்திர சிங் ஜடேஜா. அவரது பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றி பலர் அறிந்திராத சில விஷயங்களைப் பார்ப்போம்!


டிசம்பர் 6, 1988-ல் அனிருத்-லதா தம்பதிக்குப் பிறந்தவர் ரவீந்திர சிங் ஜடேஜா. ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைபார்த்த அவரது தந்தைக்கு, ஜடேஜாவை ராணுவத்தில் சேர்க்க வேண்டுமென்ற கனவு இருந்தது. ஆனால், சிறு வயதிலிருந்தே, அவரது ஒட்டுமொத்த ஈர்ப்பும், விருப்பமும் கிரிக்கெட்டின் பக்கமே இருந்தது. இது அவரது தந்தையை மிகவும் அச்சுறுத்தியது. ஜடேஜாவின் கிரிக்கெட் கனவை அவரது அம்மா தாங்கிப்பிடித்தார். எதிர்பாராத விதமாக 2005-ல் நடந்த விபத்தில் ஜடேஜா அவரது அம்மாவை இழந்தார். இந்தத் தாக்கத்தால் கிரிக்கெட் கனவை தள்ளி வைத்துவிட்டு, அவரது அப்பாவின் சொல் கேட்டு நடந்துவந்தார். இருப்பினும், அம்மாவுக்குப் பின் அவரது அக்கா, ஜடேஜாவின் கிரிக்கெட் கனவுக்கு உயிர் கொடுத்து ஊக்குவித்தார். மீண்டும் ஜடேஜாவின் ஆர்வம் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பியது. அவரது கிரிக்கெட் கனவை 2005-ல் நடந்த அண்டர்-19 உலகக் கோப்பை நிறைவேற்றியது. 

அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜடேஜா. இந்த ஆட்டம் அவரை 2008 அண்டர்-19 உலகக் கோப்பையிலும் விளையாட வைத்தது.  விராட் கோலி அந்த ஆட்டத்தின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மலேசியாவில் நடைபெற்ற அந்தத் தொடரின் வெற்றி நாயகர்களாக, இந்திய அணி ஜொலித்தது. விளையாடிய 6 போட்டிகளில் குறைந்தபட்ச ரன்களை மட்டுமே கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை புரிந்தார்.

2006-07-ல் ராஞ்சி டிராபி தொடரில் அடியெடுத்துவைத்தார். 2012-ல் நடந்த ராஞ்சி தொடரின் மூலம், தன் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்தார். விளையாடிய முதல் ஆட்டத்திலேயே 300-க்கும் மேல் ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவில் 8-வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். முதல் ஆட்டத்திலேயே 300-க்கும் மேல் ரன்களை அடித்தவர்கள் டான் ப்ராட்மேன், பிரெயின் லாரா, க்ரேஸ் போன்ற சாதனையாளர்கள் வரிசையில் ஜடேஜாவும் இடம்பெற்றார். இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். ஒரிஸாவுக்கு எதிராக 314, குஜராத்துக்கு எதிராக 303 நாட் அவுட், ரயில்வேக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 312 ரன்களை அடித்து மூன்று முச்சதங்களைப் பதிவுசெய்தார். இச்சாதனைகளைப் புரியும்போது இவருக்கு வயது 23. இதுவே இவரை இந்திய அணிக்குள் நுழைய வித்திட்டது. 





2008-09-ல் நடந்த ராஞ்சி சீசன் முடிவில், 42 விக்கெட்டுகளை வீழ்த்தி, 739 ரன்களைக் குவித்து நிலையான வீரராகத் தன்னை அடையாளம் காட்டினார். இதைப் பார்த்த தேர்வாளர்கள், 2009-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுத்தனர். தொடரின் இறுதிப் போட்டியில்தான் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார் ஜடேஜா. இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், ஜடேஜா தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன்களைக் குவித்த தனது விக்கெட்டை இழக்காமல் இருந்தார். இப்படியே தனது சிறந்த ஆட்டத்தை, கிடைக்கும் வாய்ப்புகளில் வெளிக்காட்டி இந்திய அணியின் நிலையான வீரராக முன்னேறினார்.

ஆகஸ்ட் 2013-ல் ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பான பேட்டிங், தக்க நேரத்தில் விக்கெட் வேட்டை, அபாரமான ஃபீல்டிங் என ஜடேஜா தனது பெஸ்ட்டைப் பதிவு செய்துகொண்டே இருந்தார். ஐ.பி.எல் போட்டிகளிலும் சென்னையின் ஃபேவரைட் வீரராக ஜொலித்தார். ஐ.பி.எல் மூலம் இவருக்கு `ஜட்டு' என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. சென்னைக்கு முன் ராஜஸ்தானுக்காக மூன்று சீசன்கள் விளையாடியுள்ளார். 14 போட்டிகளில் 135 ரன்களைப் பெற்ற இவரை ‛‛கிரிக்கெட்டின் `ராக்ஸ்டார்' '' என்று செல்லமாக அழைத்தார், ஆஸ்திரேலியாவின் பிரபல சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்னே.

மிடில் ஆர்டரில் இவர் வெளிக்காட்டிய சிறப்பான ஆட்டம், பல சமயங்களில் இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறது. முதல்தர கிரிக்கெட் போட்டியில் மூன்று முச்சதங்களை அடித்து முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தேடிக் கொடுத்த அவருக்குள் இன்னும் அந்த நெருப்பு எறிந்துகொண்டுதான் இருக்கிறதா? ஒரு விளையாட்டு வீரனுக்கு அவன் வெளிப்படுத்தும் ஆட்டத்தில் ஏற்ற இறக்கம் நேரத்தான் செய்யும். அவனுக்கான நேரம் ஒருநாள் கண்டிப்பாக வரும். தக்க நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஜடேஜா. அதுவும் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என மூன்று திறமைகளைக் கொண்ட ஜடேஜாவுக்கு, ஏதாவது ஒன்று கை கொடுத்து, அணியை விட்டு வெளியேறச் செய்யாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டேதான் இருந்தது. அணியில் நுழையும் எண்ணற்ற வீரர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கும்தான். ஆனால், அது எந்நிலையிலும் தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. அணியில் இடம்பெற்று கிரவுண்டில் விளையாடினாலும் சரி, இடம்பெறாமல் பெவிலியானில் உட்கார்ந்திருந்தாலும் சரி, இவரது காந்தப் பார்வை மைதானத்தை நோக்கியே இருக்கும். இவரின் திறமை மேல் நம்பிக்கை கொண்ட ஒரே ஆள் எம்.எஸ்.தோனி மட்டுமே. இவர் சொதப்பிய பல தருணங்களில், வாய்ப்புகளை வாரி வாரி வழங்கிக்கொண்டே இருந்தார் தோனி. காரணம், அவரின் கணிப்பு தவறியதேயில்லை. அதேபோல் இவரும் அதைப் பயன்படுத்திக்கொள்வார். 


இந்திய அணியில் நுழைவதற்கு முன் சாதுவான குழந்தை முகத்தோடு நுழைந்த இவர், தற்பொழுது விதவிதமான பல ஸ்டைல்களை அறிமுகப்படுத்தி பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார். முறுக்கு மீசை, சம்மர் கட்டிங் தலை, விதவிதமான தாடியமைப்பு என புதுப்புது ட்ரெண்டுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். இதை டைப் செய்துகொண்டிருக்கும்போதே, இலங்கைக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில், இரு விக்கெட்டுகளை வீழ்த்தி புன்னகையுடன் பெவிலியன் திரும்புகிறார். வாரே வாவ். ஹேப்பி பர்த்டே `ஜட்டு'. தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்!

No comments

Powered by Blogger.