ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தில் கல்முனை உள்ளீர்ப்பு; 1900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

கல்முனைத் தொகுதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 1900 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 
இந்த அபிவிருத்தி பணிகள் யாவும் உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு ஆரம்பிக்கப்படும். அவை எதிர்வரும் 2020ம் ஆண்டுக்குள் நிறைவடையும். அவற்றை நிறைவேற்றாமல் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில், 

நல்லாட்சி மலர அதிஉச்ச ஆதரவை வழங்கிய கல்முனை மக்களை கௌரவிக்கும் நோக்கில் கல்முனை - சம்மாந்துறை இணைந்த புதிய நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீமின் அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தினூடாக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தினூடாக திட்டங்கள் வரையப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இந்த நிலையில் இதற்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் “இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டத்தில்” எமது கல்முனை மாநகர சபையும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த வங்கியின் 1900 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கல்முனையில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

நாடு முழுவதும் 25 உள்ளூராட்சி மன்றங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மட்டுமே இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தினூடாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான அனைத்து பிரதேசங்களிலும் நகர மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல், போக்குவரத்து முகாமைத்துவம், நகர வடிகாலைமைப்புத் திட்டம், திண்மக்கழிவு முகாமைத்துவம், பொது கட்டிடங்களையும் சந்தைகளையும் மெருகூட்டுதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்புப் பணிகளை செய்தல், மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகள், பாலங்களை அபிவிருத்தி செய்தல், குடியிருப்பு மற்றும் தொழில் நிலையங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கழிவு நீரகற்றல் திட்டம் போன்ற அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இவை அனைத்தும் நிறைவுற்றால் எமது கல்முனை மாநகரம் உட்பட அனைத்து பிரதேசங்களையும் மிக அழகிய தோற்றத்துடன் காண முடியும். அபிவிருத்தி தொடர்பான எனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நான் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான நகர்வை முன்னெடுக்க மாட்டேன்” என்றார்.

No comments

Powered by Blogger.