தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்த முனைவோருக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்!!

                                                                                          - செ.துஜியந்தன் -
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்த மாற்றுக்கட்சிகளிடம் சோரம்போன அரசியல் வியாபாரிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்கிறார் கல்முனை மாநகர சபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் அழகக்கோன் விஜயரெத்தினம்

கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் இங்கு வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து பல கட்சிகள் களத்தில் குதித்துள்ளன. தமிழ் மக்களின் வாக்குகள் சிதறுமாக இருந்தால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் அபாயம் தோன்றும் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் பாண்டிருப்பு ஆறாம் வட்டாரத்தில் போட்டியிடும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அ.விஜயரெத்தினம் அளித்த நேர்காணல்.

கேள்வி - உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி சொல்லுங்கள்.

நான் சிறுவயதில் இருந்தே தமிழ்த்தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டவன். எனது குடும்பம் தமிழரசுக்கட்சியில் மிகுந்த பற்றுக்கொண்டது. எனது அப்பா, அப்பப்பா ஆகியோர் அக்காலத்தில் நடைபெற்ற அறவழிப்போராட்டங்களில் தொண்டர்களாக ஈடுபட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடந்த சத்தியாக்கிர போராட்டத்தின் போது இராணுவத்தினரால் தமிழ் தலைவர்கள், தமிழ் மக்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை அப்பா கதைக்கும் போது எனக்குள் தமிழ்த்தேசிய உணர்வு துளிர்விட ஆரம்பித்தது. நான் படிக்கும் போதிருந்தே என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பமானது.

இப்பகுதியில் அரசியலில் மக்களுக்கு சேவைசெய்த வேல்முருகு ஆசிரியர் 11 ஆம் கொலனியில் இருந்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது அங்கு சென்று அம் மக்களைக்காப்பாற்ற போராடினார். அதன்போது அவருக்கு அடித்து அவரது தாடியை எரித்து அனுப்பியிருந்தார்கள். அச் செயல்களையெல்லாம் கண்டும் பார்த்தும் இருக்கிறேன். அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியாக சூரியன் சின்னத்தில் போட்டியிட்டபோதும் சரி, இன்று தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பு போட்டியிட்ட போதும் காலங்காலமாக நான் கொள்கைக்காகவும், உரிமைக்காகவுமே வாக்களித்துவருகின்றேன். எக் காரணம் கொண்டும் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. நான் பரம்பரை தமிழரசுக்கட்சிக்காரன். 

எனது அரசியல் பயணம் குறிப்பாக 2005 ஆம் ஆண்டில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் தேர்தல் நடைபெறவிருந்த சமயத்தில் தமிழர்கள் எவரும் கட்சிகளில் போட்டியிடக்கூடாது என கேட்கப்பட்டிருந்தது. அப்போது போட்டியிடுவதற்கு எவரும் முன்வரவில்லை. இந் நிலையில் இங்குள்ள தமிழர்கள் சிலர் இணைந்து சுயேட்சையாக தோடம்பழச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். அதில் நானும் ஒருவனாக போட்டியிடுவதற்கு இருந்தேன். அத் தேர்தல் பின்னர் நடைபெறாமல் போனது. 

2006 ஆம் ஆண்டு மீண்டும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறுவதற்கு அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தேன். அன்று கூட இத் தேர்தலில் போட்டியிடுவதற்க்கு பயம் காரணமாக எவரும் முன்னுக்கு வரவில்லை. அந் நிலையில் என்னைப் போன்றவர்கள் முன்வந்து போட்டியிட்டிருந்தோம். அதில் ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். எங்களைப் போன்றவர்கள் அன்று முட்டுக்கொடுக்காவிட்hல் கல்முனையில் தமிழர்களின் தடயங்களே இல்லாமல் போயிருக்கும். இப்படித்தான் என் அரசியல் பிரவேசம் அமைந்தது. 

கேள்வி - .கல்முனை மாநகர சபையில் இரு தடவைகள் உறுப்பினராக இருந்துள்ளீர்கள் அம் மக்களுக்கு நீங்கள் ஆற்றிய பணிகள் என்ன?

கல்முனை மாநகரசபையில் முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிரான அல்லது பாதகமான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றபோது அதற்கெதிராக துணிந்து குரல் கொடுத்து அதனைத்தடுத்து நிறுத்தியிருக்கிறோம். எம் எல்லைகளையும் நிலங்களையும் கல்முனை மாநகரசபை சூறையாட எடுத்த முயற்சிகளை தமிழ்க்கூட்டமைப்பு என்ற ரீதியில் தடுத்துள்ளோம். கல்முனை மாநகரசபையினால் தமிழ்மக்களுக்கு கிடைக்கவேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்காகவும் பாடுபட்டுள்ளேன். 
இதுதவிர பாண்டிருப்பு மக்களுக்கு நீர் இணைப்பு இன்றியிருந்த குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளேன். பாண்டிருப்பின் மிகப்பிரதானமான திருவள்ளுவர் வீதி, பிள்ளையார்கோவில் வீதி ஆகியவற்றை செப்பனிட்டுக் கொடுத்துள்ளேன். பாண்டிருப்பு நூலகத்துக்கு சுற்றுமதில் அமைத்துக்கொடுத்துள்ளேன். பெரியதம்பிரான் கோவில் பின் வீதிக்கு மின்சார இணைப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளேன், விளையாட்டுக் கழகங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன், கடற்கரைவீதியில் கல்வெட்டு அமைத்துக்கொடுத்துள்ளேன், சிறுவர் பூங்கா அமைத்துக்கொடுத்துள்ளேன். இதுதவிர வறுமைபட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறேன். நான் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் நிறைவான சேவையையே மக்களுக்குச் செய்துள்ளேன்.

கேள்வி - இம் முறை கல்முனை மாநகர சபைத்தேர்தல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு மிகச் சவாலானதேர்தலாக அமையும் என நினைக்கின்றீர்களா?

கல்முனைவாழ் தமிழ் மக்களின் இருப்புக்கும், அவர்களின் உரிமைக்காகவும் அன்று தொடக்கம் இன்று வரை குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு கட்சியென்றால் அது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மட்டும்தான். மற்றக்கட்சிகளும் அதில் போட்டியிடுகின்ற அரசியல் வியாபாரிகளும் அவர்களது பையை நிரப்பிக்கொண்டு போகும் வேலையைத்தான் பார்க்கின்றார்கள். கல்முனை தமிழ் மக்கள் மாற்றுக்கட்சிகளுக்கு ஒரு போதும் சோரம் போகாதவர்கள். இதனை ஒவ்வொரு தேர்தலிலும் நிருபித்து வந்துள்ளனர். 

கல்முனையில் இன்றிருக்கும் நிலையில் முஸ்லிம்களிடமிருந்து எமது இருப்பைப் பாதுகாக்க வேண்டும். நகரதிட்டமிடல் என்றபோர்வையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தமிழ் மக்களுக்கு பாதகமான திட்டங்களாக அமைந்துள்ளது. இதனை பலமுறை எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை சுட்டிக்காட்டிவந்துள்ளது. இத்தேர்தலில் தமிழக்கூட்டமைப்புக்கு எதிராக பல முகவர்கள் இறக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் நோக்கம் மாநகர சபைக்குச் செல்வதல்ல. கூட்டமைப்பின் விகிதாரத்தை குறைக்கும் நோக்காகும். சில்லறைகளுக்கு விலைபோன அரசியல் வியாபாரிகள் தமிழ் மக்களை குழப்புகின்றனர். மக்கள் இவர்களின் பசப்புவார்த்தைகளுக்கு ஒரு போதும் மயங்கவோ துணைபோகவோ மாட்டார்கள். 

கல்முனை மாநகர சபையில் வட்டாரத்தேர்தல் முறையில் இம் முறைதான் அதிகளவிலான தமிழ் உறுப்பினர்கள் செல்லவுள்ளனர். 12 உறுப்பினர்கள் மாநகர சபைக்கு தெரிவாகவுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமோகவெற்றியீட்டும். சூரியன் என்றும் யானை என்றும் மான் என்றும் கை என்றும் படம்காட்டும் நபர்களுக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். எமக்கு எந்தக் கட்சியும் சவால் அல்ல. சூரியனில் போட்டியிடுபவர்களில் பாண்டிருப்பில் தமது காணியை முஸ்லீம் நபருக்கு பெரும் தொகைப்பணத்திற்காக விற்றவர் போட்டியிடுகின்றார். இவ்வாறானவர்களுக்கு வாக்களித்தால் கல்முனையில் தமிழ் மக்களின் இருக்கும் நிலங்களையும் பணத்திற்காக இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல கொலைகாரர்களும், விடுதலைப்போராட்டத்துக்கு எதிராகவும் இருந்தவர்கள் இன்று தியாகிகளாகப்பார்க்கின்றார்கள்.

கேள்வி – தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்து கடந்த முப்பதுவருடங்களாக இயங்கும் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியாதுள்ளதே இதுபற்றி

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் இறுதிச்சந்தர்ப்பத்தில் உள்ளது. இத் தேர்தல் நிறைவு பெற்றதும் அது தரம் உயர்த்தப்படும் என சம்பந்தன் ஐயா உறுதிகூறியுள்ளார். இதற்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைகள் போட்டுவந்தனர். அவையெல்லாம் சுமுகமாக தீர்க்கப்படும். இதைவைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. 
கேள்வி – கல்முனை வடக்கு மக்களுக்கென தனியான ஒரு பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும் என முன்னெடுக்கப்பட்டுவரும் நகர்வுகள் பற்றி 
சாய்ந்தமருது மக்களுக்கு தனியான ஒரு பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.

இக் கோரிக்கைக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபை உருவானால் கல்முனை வடக்குக்கும் ஒரு பிரதேச சபையோ அல்லது நகர சபையோ உருவாக்கித்தர வேண்டும். அப்பிரதேச சபையானது கல்முனை தரவைக்கோவிலை எல்லையாகக் கொண்டு பெரியநீலாவணை தொடக்கம் சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ்க்கிராமங்களை உள்ளடக்கியதாக அமையவேண்டும். 

கேள்வி - இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

இன்றைய இளைஞர்கள் பலரினால் அரசியலில் பிழையாக நடத்தப்படுகின்றனர். அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற மாயைக்குள் அவர்களை திசைதிருப்ப அரசியல் முகவர்கள் செயற்பட்டுவருகின்றனர். இவ்வாறானவர்களிடம் இருந்து தமிழ் இளைஞர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். இளைஞர்கள் அரசியலில் பங்கேற்றக ஆர்வமுடன் முன்வரவேண்டும். கல்முனையில் மாற்று இனத்தவர்களுக்கு விற்கப்படும் காணிகள், திட்டமிட்டு சுவீகரிக்கப்படும் காணிகள், தமிழ்க்கலாசார பாரம்பரியங்கள் என்பவற்றை பாதுகாக்க முன்நிற்கவேண்டும். அதைவிடுத்து அற்பசொற்ப சலுகைகளுக்காக மாற்றுக்கட்சிகளின் மாயையில் இளைஞர்கள் சிக்கக்கூடாது என்றார். 

No comments

Powered by Blogger.