பதவி ஆசை யாரைத்தான் விட்டது?


ஜனாதிபதியாகத் தனது பதவிக் காலம் எப்போது முடிவடைகின்றது என்று உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அவரது இந்த முடிவு ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாது ஒழித்து புதிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இடைத் தரகராகத்தான் மைத்திரிபால சிறிசேன 2015ம் ஆண்டு பதவிக்குக் கொண்டு வரப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றும் அதேநேரம் நாட்டின் சாபக்கேடாக மாறியிருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காகவும் தான் அந்தப் பதவி பற்றிய எண்ணம் ஏதுமற்றிருந்த மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் அதனடிப்படையிலேயே மைத்திரிக்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்திருந்தன.

ஆரம்பத்தில், தான் மற்றொரு பதவிக் காலத்துக்கு ஆசைப்படப் போவதில்லை என்று மைத்திரி திரும்பத் திரும்பக் கூறி வந்தார்.

தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதியளித்தது போல இந்தப் பதவிக் காலத்துடனேயே தான் பதவியில் இருந்து அகன்று விடுவார் என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.

எனினும் சிறிது காலத்தின் பின்னர் இந்த நிலைப்பாட்டில் அவர் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறாரா என்கிற சந்தேகம் எழவே செய்தது.

கட்சி அரசியல் இடையில் புகுந்துகொண்ட நிலையில் இந்த விவகாரம் ஆரம்பத்தில் இருந்தது போன்ற தெளிவான நிலையில் தொடரவில்லை என்பது தெரிந்தது.

நாடாளுமன்றத்தை ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் அதனை ஈடுசெய்யும் வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக்கூடாது என்கிற கருத்து சுதந்திரக் கட்சியினரிடம் இருந்து கிளம்பத் தொடங்கியது.

புதிய அரசமைப்புத் தொடர்பான பேச்சுக்களில் கூட இந்த நிலைப்பாட்டையே சுதந்திரக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பதையும் கவனித்தாக வேண்டும்.

இதன் விளைவாக 19வது சட்டத் திருத்தம் நிறைவேற் றப்பட்ட போது ஜனாதிபதி மைத்திரிபால பதவியில் இருக்கும் வரைக்கும் அவரிடம் சில பல அதிகாரங்கள் இருக்கத்தக்க வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் புதிய ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே என்பதும் மட்டுப்படுத்தப்பட்டது.

அப்போது இது தொடர்பில் எதுவும் பேசாதிருந்த ஜனாதிபதியும் தற்போது தனது பதவிக் காலம், திருத்தத்துக்கு முன்னரான அரசமைப்புப்படி 6 ஆண்டுகளா அல்லது 5 ஆண்டுகளா என்று உயர் நீதிமன்றிடம் கேட்கிறார்.

இவருக்கு முன்னர் இந்தப் பதவியிலிருந்தவர்களான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக் கூறித்தான் பதவிக்கு வந்தார்கள். ஆனால், கடைசி வரையில் அதனைச் செய்யவில்லை.

அதனால்தான் அந்தப் பதவியை இல்லாமல் செய்யும் போது அந்தப் பதவி குறித்த எதிர்பார்ப்பு ஏதுமின்றியிருந்த மைத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் பொது மனிதராகவே அவர் இந்தப் பதவிக்கு அழைத்து வரப்பட்டார். அது அவர் அந்தப் பதவியில் ஆசைப்பட மாட்டார் என்கிற எதிர்பார்ப்பின் பேரிலேயே நடந்தது.

ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் இப்போது பொய்த்துப் போய்விட்டன.மேலும் ஓர் ஆண்டு பதவியில் நீடிக்கும் ஆசை மைத்திரிபால சிறிசேனவுக்கு வந்து விட்டது.

கட்சி அரசியலின் நெருக்கடியால் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்று காரணம் கற்பிக்கப்படக்கூடும்.

எந்தக் காரணமாக இருந்தாலும் பதவி ஆசை வந்த பின்னர் அது ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கும் என்பதை இந்த நாடு இரு ஜனாதிபதிகளின் காலத்தில் பார்த்து விட்டது.

எனவே மைத்திரியின் இந்த ஆசையும் என்னென்ன விபரீதங்களை ஏற்படுத்துமோ என்கிற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகின்றது.

No comments

Powered by Blogger.