மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


அதிபர் வராததால் பாடசாலையின் பூட்டை உடைக்கும் நிலை; உரிய நடவடிக்கை எடுக்க பணிப்புரை!!

அதிபர் வராததால் பாடசாலையின் பூட்டை உடைக்கும் நிலை;  உரிய நடவடிக்கை எடுக்க பணிப்புரை
பாடசாலையின் பூட்டை உடைத்து பாடசாலையை திறந்த சம்பவம் இன்று (17.01.2018) கண்டி தெல்தோட்டை நாராங்ஹின்ன பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருதாவது, 

இன்று (17.01.2018) கண்டி தெல்தோட்டை நாராங்ஹின்ன பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தராமையின் காரணமாக குறித்த பாடசாலையை திறக்க முடியாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்குள் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து பிள்ளைகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி வலயத்தின் உத்தரவின் பேரில் பாடசாலைக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு பாடசாலைக்குள் சென்றனர். 

இது தொடர்பாக பாடசாலையின் பெற்றோர் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர் இது தொடர்பாக உடனடியாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு குறித்த அதிபருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். 

கடந்த காலங்களில் குறித்த பாடசாலை அதிபர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவர் தொடர்பாக மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தி எழுதப்படும் வரை (பிற்பகல் 1.10) பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக அதிபர் காரியாலயத்தை திறக்க முடியாதுள்ளதாகவும் ஆசிரியர்கள் வரவுப் பதிவேடுகளில் கையொப்பம் இட முடியாதுள்ளதுடன், மாணவர்களின் வருகை பதிவேடுகளிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த அதிபரை இடமாற்றம் செய்வதால் மாத்திரம் இதற்கு தீர்வு காண முடியாது எனவும் அதனை விட அதிகமான ஒரு நடவடிக்கையை மாகாண கல்வி அமைச்சு எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.