தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும் - வேட்பாளர் க.சிவலிங்கம் தெரிவிப்பு!


நேர்காணல் - செ.துஜியந்தன்கல்முனை வாழ் தமிழ் மக்களின் இன்றைய நிலை தொடர்பில் கல்முனை மாநகர சபைத்தேர்தலில் 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழத்தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளர் க.சிவலிங்கம் வழங்கிய நேர்காணல்....

  • உங்களைப்பற்றி கூறுங்கள்? 

கல்முனையைச் சேர்ந்த நான் விவசாய விஞ்ஞான பட்டதாரியாகிய நான் விவசாய திணைக்களத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விதை அத்தாட்சிபடுத்தல் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி இருக்கிறேன். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனத்தில் மாவட்ட இணைப்பாளராகவும், விவசாய வல்லுனராகவும் கடமையாற்றியதுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவிகளையும் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் திறமையாகச் செயல்பட்டு இருக்கிறேன்.

  • உங்கள் திடீர் அரசியல் பிரவேசம் பற்றி சொல்லுங்கள்? 

எனது அரசியல் பிரவேசம் மிக குறுகிய காலம்தான் ஆனால் சமூக சேவையை தன்னலம் கருதாமல் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மிகத் தீவிரமாக செய்துவருகின்றேன். முக்கியமாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் தரம் உயர்த்துதல் மற்றும் கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் என்றபோர்வையில் தமிழர்களின் வயல் நிலங்களை அபகரிக்கும் முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்து அதனை தடுத்து நிறுத்தியமை அத்துடன் எல்லை நிர்ணயம் போன்ற தலையீடுகளுக்கு குரல் கொடுத்தும் இருக்கிறேன். இந்த அடிப்படையில் கல்முனைவாழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்காக மக்களால் நான் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளேன்.

  •  கல்முனை மாநகர சபைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதன் நோக்கம்?

அரசியல் அதிகாரம் சிறிதளவும் இல்லாமல் நாம் இங்கு எதிர் நீச்சல் போடமுடியாது. கல்முனை மாநகர சபையின் தன்னிச்சையான செயற்பாடுகள் பல தமிழ் மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் செயற்பாடுகளாகவுள்ளன. இவர்களின் நில ஆக்கிரமிப்பு, தன்னிச்சையான செயற்பாடுகள், கல்முனை மக்களின் வரிப்பணத்தின் வருமானக் கணக்கு, கல்முனை மாநகரத்தின் சுற்று சூழல் சம்பந்தமான பிரச்சினைகள் உட்பட நிறைய காணப்படுகின்றன. இவைகளை தட்டிக்கேட்பதற்க்கு சரியான தமிழ் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. இம் முறை நான் பார்வையாளனாக இல்லாமல் இவ் விடங்களில் நேரடியாக தலையிட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் போட்டியிடுகின்றேன். 

  • கல்முனையில் 12 ஆம் வட்டாரம் இரட்டை அங்கத்தவர்களைக் கொண்ட வட்டாரமாகும். இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 

கல்முனை 12 ஆம் வட்டாரம் மற்றைய வட்டாரங்களை விட வேறுபட்டது. முக்கியமாக தமிழ்-முஸ்லிம் மக்களை சமனாக பிரதிபலிக்கின்ற வட்டாரம். அதுவும் இரட்டை அங்கத்தவர்களை கொண்ட வட்டாரமாகும். இங்கு போட்டியிடுகின்ற எந்த கட்சி கூடுதலான வாக்குகளைப் பெறுகின்றதோ அந்தக் கட்சிக்கு இரண்டு அங்கத்தவர்கள் கிடைக்கும். இதில் முக்கியமாக திட்டமிடப்பட்டு குடியேற்றப்பட்ட ஒரு குடியேற்றப்பகுதியையும், கல்முனைக்குடியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய இரட்டை அங்கத்தவர்கள் வரக்கூடிய வட்டாரமாகும். இவ் வட்டாரத்தை தமிழ் மக்கள் வெல்வதன் மூலமே கல்முனையில் தமிழர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். இவ் வட்டாரத்தில் ஒட்டுக்கட்சிகளும், சுயேட்சைகுழுக்களும் போட்டியிடுகின்றன. தமிழர்கள் மாற்றுக் கட்சியின் பசப்புவார்த்தைகளுக்கு மயங்கிவிடாமல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் எனகேட்கிறேன். 

  • கல்முனையின் தற்போதைய நிலைபற்றி?

கல்முனை மாநகரத்தில் இது கலப்பின விகிதாசார தேர்தலாக இருப்பதினால் 40 உறுப்பினர்கள் வருவதற்கான சாத்தியம் இருக்கின்றது. இதில் 12 தமிழ் உறுப்பினர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் வீட்டு சின்னத்திற்கே அளிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பதை எமது கல்முனை மக்கள் நிருபிப்பார்கள். மக்களின் மனம் வீட்டுக்கு வாக்களிப்பதற்கு தயார்நிலையில் இருக்கின்றது. 

  • உங்கள் ஆதரவுத்தளம் எப்படி இருக்கிறது?

எனது ஆதரவுத்தளம் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றது. கல்முனைவாழ் தமிழ் மக்களின் ஒற்றுமை மிக முக்கியமானதாகும். எனவே அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் மாசி மாதம் 10 ஆம் திகதியாகும். அனைவரும் வீட்டுசின்னத்திற்க்கு வாக்களித்து உங்களில் ஒருவனாக உங்கள் சார்பாக எனது குரல் மாநகர சபையில் ஒலிப்பதறக்கு மக்கள் ஒருமித்து வாக்களிக்கவேண்டும்.  

  • நீங்கள் வெற்றி பெற்றால் கல்முனை மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

கல்முனைப் பிரதேசம் தமிழ் மக்களின் தாயகப்பிரதேசமாகும். அதிலும் கல்முனை நகர் உள்ளடங்கியதான பகுதியை நாம் காப்பாற்றவேண்டியவர்களாக இருக்கின்றோம். நல்லவர், வல்லவர், கல்விமான்களை கல்முனை மாநகர சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் இச் சபையின் நிதி நிர்வாக நடவடிக்கை, அரசியல் அபிலாசைகள், முக்கியமாக தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச சபை, புரையேபடிப்போயுள்ள பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் நகர அபிவிருத்தி திட்டத்தில் வெளிப்படைத் தன்மை போன்ற விடயங்களை எமது தலைமைகள் இடத்திலும் சுட்டிக்காட்டி குறிப்பாக கல்முனைத் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் வகையில் எனது எதிர்காலப் பணிகள் அமையும்.    

No comments

Powered by Blogger.