மட்டில் இரு வேட்பாளர்களின் உடமைகள் சேதம்: மாறி மாறி தாக்கிக் கொண்டனரா?

வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியன இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதற்கமைய, கோறளைப்பற்று பிரதேசசபை - கிண்ணயடி பதினோராம் வட்டாரத்தில், தமிழ் தேசிய பேரவை சார்பாக போட்டியிடும் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஒருவரது, வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாதைகளை சேதப்படுத்திய விஷமிகள், அவரது வீட்டுக்கும் கல்லெறிந்துள்ளனர்.


இதனால் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை, இந்தத் தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களே மேற்கொண்டிருக்கலாம் என, சம்பந்தப்பட்ட வேட்பாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இந்தநிலையில், அதே தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து கிண்ணயடி - துரையடி வீதியில் இன்று (22) திறப்பதற்கு தயாராக இருந்த, கட்சி அலுவலகத்தின் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.


இதனை தேசிய மக்கள் முன்னணி சார்பாக தமிழ் தேசிய பேரவையில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்களே செய்திருக்கலாம் என, கூட்டமைப்பு வேட்பாளரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இச் சம்பவங்கள் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.