கல்முனை மாநகர சபைத்தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பில் பாண்டிருப்பு பத்தாம் வட்டாரத்தில் போட்டியிடும் இளைஞர் கி.சாருகாஸ் வழங்கிய நேர்காணல்

நேர்காணல் - செ.துஜியந்தன்

இளைஞர்களை உணர்ச்சி அரசியலுக்குள் வைத்திருக்கவே தமிழ்த்தேசியக்;கூட்டமைப்பு விரும்புகின்றது முதியவர்கள் அரசியலிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்  என கல்முனை மாநகர சபைத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் பாண்டிருப்பு பத்தாம் வட்டாரத்தில் போட்டியிடும் கி.சாருகாஸ் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபைத்தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பில் பாண்டிருப்பு பத்தாம் வட்டாரத்தில் போட்டியிடும்  இளைஞர் கி.சாருகாஸ் வழங்கிய நேர்காணல் 

  • உங்களுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

கடந்தகால யுத்தசூழ்நிலையில் நான் உட்பட எனது குடும்பம் பல துன்ப துயரங்களைச் சந்தித்திருக்கின்றது. ஒரு வகையில் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த குடும்பப்பின்ணனியைக் கொண்டவன். எமது தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களை சூடேற்றும் வசனங்களால் உசுப்பேற்றிவிட்டு வேடிக்கை பார்த்த வரலாறுகளே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அவர்களது சுகபோகங்களுக்காக மக்களை பலிக்கடாவாக்குகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் சுயநல அரசியல் மேலோங்கி விட்டது. கடந்தகால அழிவுகளில் இருந்து கூட எம் தலைவர்கள் பாடம்படிக்கவில்லை. 
இளைஞர்களை உணர்ச்சி வசனங்களைக்கூறி உசுப்பேற்றிவிட்டு பின்னால் நின்று வேடிக்கை பார்க்கின்றார்கள். அவர்கள் அரசின் பின்கதவால் சென்று சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள். இப்படியான போலி அரசியலை நடத்துவதை விட மக்களுக்கு நேரடியாக அரசாங்கத்திடம் இருந்து அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நான் இத்தேர்தல் களத்தில் குதித்துள்ளேன்.

  • ஏன் நீங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடவில்லை?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பது ஒரு சிலருக்கு மட்டும் நிழல் கொடுக்கின்ற சுயநலவாதிகளின் கூடாரம் ஆகிவிட்டது. அது என்ன நோக்கத்திற்காக தலைவரால் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து விலகி தங்களுடைய பதவிகளையும், குடும்பத்தினரையும் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காகாக கூட்டமைப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். 
போலித் தேசியம் பேசிக்கொண்டு மக்களையும் இளைஞர்களையும் இனியும் ஏமாற்ற முடியாது. உரிமையும் இன்றி அபிவிருத்தியும் இன்றி தமிழத் சமூகம் வறுமைநிலையில் வாடுகின்றது. முதலில் இவர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுப்பதற்க்கு முன் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் மூலம் அபிவிருத்தியை பெறுவதைவிட நேரடியாக தேசியக்கட்சியை ஆதரித்து அதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தை கட்டியெழுப்பவேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி மாற்று இனத்தவர்களின் கடைகளிலும் வீடுகளிலும் வேலைக்குச் செல்கின்றனர். இதனை தவறாகப்பயன்படுத்தி காலாசர சீரழிவுகள் எம் சமூகத்தில் அதிகரித்து விட்டது. 
நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் கோட்டாவிலும் அமைச்சர்களிடம் இருந்து பெறும் சலுகைகளிலும் அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கும் சொந்தக்காரர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கின்றனர். இது நடந்திருக்கின்றது. 
முன்னர் இருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேறு தற்போது இருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேறு. தந்தை செல்வாவைப்போல் நடந்து கொள்ளும் மனப்பக்குவம் இன்று கூட்டமைப்பிலுள்ள எந்த தந்தையிடமும் கிடையாது. மக்களை ஏமாற்றும் அரசியல் செய்யாமல் இளைஞர்களுக்கான அபிவிருத்தி அரசியலை திறந்த மனதுடன் முன்னெடுக்கவுள்ளேன்.

  • கல்முனை மாநகர சபைத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் உங்களின் ஆதரவுத்தளம் எவ்வாறு இருக்கிறது?

இன்று இளைஞர்கள் எல்லோரும் விழிப்படைந்துள்ளனர். இத் தேர்தலில் தமிழித்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் நபர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகின்றது. இம் முறை தேசியக்கட்சியினை ஆதரிக்கும் நிலைக்கு மக்கள் வந்துள்ளனர். எனக்கு பின்னால் இளைஞர்கள் அணி அணியாக திரண்டுள்ளனர். இப் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் மிகவும் வயது குறைந்தவனாக நான் உள்ளேன். என்னிடம் சுயநலம் இல்லை. மக்களுக்காக எதையும் செய்வதற்க்கு நான் தயார். ஆனால் போலி அரசியல் செய்ய நான் தயாரில்லை. உண்மையைச் சொல்லியே மக்களிடம் வாக்குக்கேட்கிறேன். 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்களிடம் பரம்பரைக்குணம் ஒன்று உள்ளது. அவர்களது கட்சியைத்தவிர மாற்றுக்கட்சியில் கேட்டால் உடனே துரோகி என பட்டம் சூட்டுவார்கள். அரசிடமிருந்து அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதற்க்கு நாம் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியில் கேட்டால் துரோகி. இன்று தமிழ் இனத்தையே காட்டிக்கொடுத்து தமிழ்மக்களுக்கெதிராக தமிழத்தேசியத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் எல்லாம் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள். கூட்டமைப்பிற்குள் அவர்கள் வந்தவுடன் தியாகிகள் ஆகிவிட்டார்கள். ஆனால் இளைஞர்களாகி நாம் தூய மனதுடன் மக்களுக்கு ஐக்கியத்தேசியக் கட்சியில் சேவை செய்வதற்கு முன்வந்தவுடன் எம்மை துரோகி என்கின்றார்கள். இவ்வாறான போலித்தேசியவாதிகளுக்கு மக்கள் இம்முறை தகுந்தபாடம் புகட்டுவார்கள். 

  • நீங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

aநான் ஏற்கனவே சொன்னதைப்போல் எனது வட்டாரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பேன். மாநகர சபை மூலம் கிடைக்கும் சம்பளத்தை கல்விக்காகப்பணன்படுத்துவேன். இங்கு ஒரு தனியார் கல்வி நிலையம் ஒன்றை ஆரம்பித்து மாணவர்களுக்கான இலவச பிரத்தியோக கல்வியை வழங்கவுள்ளேன். அதற்கென ஒரு கல்வி நிலையத்தை ஆரம்ப்பிப்பதற்கான வேலைகளை திட்டமிட்டுள்ளேன். குறிபாக இளைஞர், யுவதிகளுக்கு எமது கட்சி தலைமையிடம் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்து அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும், தொழில் பேட்டைகளையம் பிரதேசத்தில் நிறுவவுள்ளேன். எனது நோக்கம் மக்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுப்பதாகும். அரசாங்கத்தோடு இணைந்து செல்கின்றபோது எமது உரிமைகளையும் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்

No comments

Powered by Blogger.