எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!

பாறை உச்சியில் உள்ள கோட்டைக்கு நடுவிலிருக்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய நீர்க்குளம் காற்றில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இவைத்தவிர, பாறை உச்சியில் அரண்மனை ஒன்று பிரமாண்டமாக அமைந்துள்ளது. அந்த அழகைக் காண ஆட்கள் இரும்பினால் செய்யப்பட்ட படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு இறங்க ஒரு நாளாகும். ஆம், அது 660 அடி உயரமுள்ள சிங்கப் பாறை. 


பார்ப்பதற்குச் சிங்கம் படுத்திருப்பதைப் போன்ற அமைப்பில் இருக்கிறது இந்தப் பாறை. 600 அடி உயரத்துக்கு மேற்புறம் பாறைகளில் அமைந்துள்ள மரங்களும், குளங்களும் இன்றளவும் பசுமை மாறாமல் நிலைத்து நிற்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளிவரும் லாவாக்கள் காலப்போக்கில் உறைந்ததுதான் இந்தப் பாறை என்ற வரலாறும் உண்டு.

இலங்கையிலுள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கிராமத்தில் இப்பாறை அமைந்துள்ளது. இலங்கையின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. இப்பாறைக்கோட்டை உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் 1982-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களைப் போலவே ஓவியம் இக்கோட்டையின் மீது அமைந்துள்ளது. இத்தனை காலமாக, மழை வெயில் என அனைத்தையும் கடந்து ஓவியங்கள் புதுமை மாறாமல் காட்சியளிப்பது, உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போது அங்கு வரும் பயணிகளால் ஓவியங்கள் சேதமடையத் துவங்கியுள்ளன. இதனைப் பாதுகாக்க அரசே இத்தாலியில் இருந்து ரசாயன திரவங்களை வாங்கி ஓவியங்களின் மீது பூசி இருக்கிறது. இக்கோட்டையை காசியப்பன் எனும் அரசன் கி.பி 477 முதல் கி.பி 495-ம் ஆண்டு வரையில் வடிவமைத்து ஆட்சி செய்து வந்தான் என வரலாறு சொல்கிறது. சிகிரியா கிராமமானது கொழும்பிலிருந்து 165 கிமீ தூரத்திலும், தம்புள்ளாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்ததுள்ளது. 


முழுவதும் பாறையாக இருந்தாலும் இதன் மேற்புறம் எப்போதும் பசுமையாகவே இருக்கிறது. இம்மலையைச் சுற்றி அடர்ந்த நீரூற்றுகளும், குளியல் குளங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன என்பது மற்றொரு சிறப்பு. காசியப்ப அரசன் தன் சகோதரனுக்குப் பயந்து பாதுகாப்பான இடமாக இக்கோட்டையைத் தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தபோது பாறை கரடு முரடான உச்சியைக் கொண்டு இருந்திருக்கிறது. அப்பாறையைச் சிங்கம் போன்ற தோற்றத்துக்கு மாற்றி பாறையிலும், பாறையைச் சுற்றிலும் பசுமையை ஏற்படுத்தினார். காசியப்பனுக்குப் பின்னர் இது புத்த துறவிகளின் தங்கும் இடமாக மாறியது. இப்பாறையின் உச்சியில் அரண்மனை, பயிற்சி எடுக்கும் பகுதி, விருந்தினர் தங்கும் இடங்கள், குளங்கள் எனப் பலவகை அமைப்புகள் பார்க்க பிரமாண்டமாக அமைந்துள்ளன. பழங்காலத்தில் மலையின் உச்சியை சமன்படுத்தி அமைத்த கோட்டைகளில் இது முக்கியமானது. சுமார் 1.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பாறையின் உச்சியில் உருவாக்கப்பட்ட குளம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும், 21 மீட்டர் அகலமும் கொண்டது. பாறையின் உச்சியில் மேற்புறம் 360 டிகிரி கோணத்தில் சுற்றிப் பார்க்கலாம். 


பாறையின் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்பகுதிக்குள் பார்வையாளர்கள் பாறைக்குள் நுழையுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதுவே பார்வையாளர்களுக்கு திகில் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர, மலையேறும் படிக்கட்டுகளும் பாறைகளில் ஒட்ட வைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நடந்து செல்லும்போது நிச்சயமாகப் பதற்றம் உருவாகும். பாறைமீது அமைக்கப்பட்டுள்ள படிகளை ஒட்டி இளைப்பாற, தியானம் செய்ய பாறையில் குகை வடிவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையிடச் செல்லும் பயணிகள் உடன் குடிநீரை எடுத்துச் செல்வது நல்லது. அங்கே கடைகள் ஏதும் இல்லை. சிங்கப் பாறையில் அப்போது ஏற்படுத்திய நீரூற்றுகள் இன்னும் நீரை ஊற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பாறையில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாவாசிகளுக்கு சிங்கப்பாறை சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். ஆம், சிகரியா பாறைக்குச் சென்று திரும்பும் அனைவரும் மனதில் உள்ள பாரம் குறைவதாகத்தான் சொல்கிறார்கள்.

சிகரியா பாறையை ஒட்டி பிதுரங்கல் குன்று ஒன்று உள்ளது. அங்கு யானையின் மீது அமர்ந்தவாறே தண்ணீருக்குள் சவாரி செய்யலாம்.

No comments

Powered by Blogger.