மட்டக்களப்பு மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை மறுசீரமைக்கப்படுமா?

                                                                                            -செ.துஜியந்தன்-
ஒரு காலத்தில் மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஓட்டுக்கு மக்கள் மத்தியில் அதிக கேள்வி நிலவிய காலம் இருந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஓடுகள் யாழ்ப்பாணம் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. 

தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் தொழிலாளிகளின் கடும் உழைப்பினால் தரமான ஓடுகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்று மண்டூரிலுள்ள பல வீடுகளின் மேற்கூரையை மண்டூர் ஓடுகளே அலங்கரித்து நிற்கின்றது. 21 வருடங்கள் கழித்தும் அதன் உறுதி தரம் குன்றாமல் வீட்டுக்கூரையை பாதுகாக்கின்றது என்றால் மண்டூர் ஓடுகளின் தரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கணேசலிங்கம் அவர்களின் அயராத முயற்சியினால் பாடுமீன் தொழிற்சாலை (சிங்கிங் பிஸ் என்டர்பிரைசஸ்) என்ற பெயரில் மண்டூர் பிரதேசத்தில் ஒரு ஓட்டுத் தொழிற்சாலை அமைக்கப்பட்டதுடன். ஆதில் பலபேர் வேலைக்கு அமர்த்தப்பட்டு அத் தொழிற்சாலை திறம்பட இயங்கிவந்தது.

கிழக்கு மாகாணத்தில் 1978 இல் வீசிய கடும் சூறாவளியினால் மட்டக்களப்பு பிரதேசமே சின்னாபின்னமாகியது. பல உயிரிழப்பையும், பெறுமதி மிக்க சொத்திழப்பையும் அம் மக்கள் சந்தித்திருந்தனர். இத் துயரில் இருந்து மக்களை மீட்டெடுக்க அரசும், பல நிறுவனங்களும் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவந்தது. மக்களுக்கு நிவாரணப்பணிகளை அக்காலத்தில் முன்னின்று செய்த நிறுவனங்களில் ரெட்பானா நிறுவனமும் ஒன்றாகும். இந் நிறுவனத்தின் அதிகாரியாக யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த கந்தசாமி என்பவர் செயற்பட்டுவந்தார். 

இவரும் இவருடன் சேர்ந்தவர்களும் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். இவர்களுக்கு அக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கணேசலிங்கம் அவர்களும் ஒத்துழைப்பு வழங்கினார். 

இப் பிரதேசத்திலுள்ள களி வளத்தைக் கொண்டு ஒரு ஓட்டுத்தொழிற்சாலை அமைத்தால் என்ன என்ற சிந்தனை தோன்றியுள்ளது.அச்சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பாடுமீன் ஓட்டுத்தொழிற்சாலை (சிங்கிங் பிஸ் என்டர் பிரைஸஸ்) என்ற பேரில் கூட்டாக சிலரால் 1979 இல் இங்கு ஓட்டுத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. 200 பேர் வரையில் இங்கிருந்த ஓட்டுத்தொழிற்சாலையில் வேலை செய்துள்ளனர். ஆரம்பத்தில் களி மண்ணை காலால் மிதித்துதான் பதப்படுத்தி வந்துள்ளார்கள். அதன் பிறகுதான் இயந்திரம் வந்துள்ளது.

அன்று பல பேருக்கு வாழ்வளித்த மண்டூர் ஓட்டுத்தொழிற்சாலை இன்று பாழடைந்த நிலையில் பற்றைக்காடாக காட்சியளிக்கின்றது. இங்கே ஓட்டுத்தொழிற்சாலை ஒன்று இருந்ததற்கான கட்டிடங்களின் சிதைவுகள் காட்சியளிப்பதோடு அவ்விடம் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறியிருக்கின்றது. 1979 தொடக்கம் 1990 வரை இயங்கிய ஓட்டுத்தொழிற்சாலை நாட்டில் இடம் பெற்ற அசாதாரண நிலை காரணமாக குறிப்பாக கிழக்கில் 1990 இல் ஏற்பட்ட வன் செயல்கள் காரணமாக முற்று முழுதாக அதன் செயற்பாட்டை நிறுத்திக்கொண்டது. அதில் பணிபுரிந்த பலர் அதனைக்கைவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்றனர்.

இவ் ஓட்டுத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பூபாலபிள்ளை (73வயது) என்பவர்
இப்படிக்கூறுகின்றார்.....

மண்டூர் ஓட்டுத்தொழிற்சாலை என்றால் இங்கமட்டுமில்ல நாட்டில எல்லா இடத்திலையும் பிரபல்யமாக இருந்துச்சு. இங்க தரமான ஓடுகளை உற்பத்தி செஞ்சோம். யாழ்ப்பாணம் வரைக்கும் மண்டூர் ஓடு போயிருக்குது. ஒரு நாளைக்கு மூவாயிரம் ஓடுகள் செய்வம். அப்ப இருபது ரூபா சம்பளம்தான் கிடைச்சது.

தொண்ணூறாம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலினால்.ஓட்டுத்தொழிற்சாலையை கொண்டு இயக்க ஏலாமப்போயிட்டுது. இயக்கமும், இராணுவமும் ஓட்டுத்தொழிற்சாலையை மாறி மாறி தங்கட முகாம்களாக பாவிக்கத்தொடங்கிட்டானுங்க இதனால அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. கடைசியா இரணுவம் வந்து பிடிச்சிட்டு இருந்தானுகள். பிறகு வேற இடத்தில விசேட அதிரடிப்படை முகாம் அமைச்சது. அதற்கு ஓட்டுத்தொழிற்சாலையில இருந்த தகரம், கம்பிகள், ஓடுகள் உட்பட சகலதையும் ஒவ்வொன்றாக் கழட்டி எடுத்துத்திட்டுப் போயிற்றானுகள். அவங்கட இந்த செயற்பாடு தொடர்பில் இராணுவப் பெரியாட்களிட்ட முறையிட்டேன். என்னக்கூப்பிட்டும் கதைச்சாங்க. இராணுவத்திட பேரச்சொல்லி ஊருக்க இருந்த சில ஆட்களும் ஓட்டுத்தொழிற்சாலையில இருந்த சாமான் எல்லாம் கழட்டித்துப்போயிட்டானுகள்.

இதப்பாத்திட்டு அங்கயிருந்த மெசின் (இயந்திரம்) ஒன்றக்கழட்டித்து வந்து வீட்ட வைச்சிருக்கன். புழையபடி இந்த ஓட்டுத்தொழிற்சாலையை ஆரம்பிச்சா பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம் என்றார்.

மண்டூரைச் சேர்ந்த கு.இராசேந்திரம் (60வயது).....

இந்த ஓட்டுத்தொழிற்சாலையில கந்தசாமி, சிவஞானசுந்தரம், தங்கராசா, சந்திரகுமார் எண்டு நாலுபேர் முகாமையாராக இருந்திருக்காங்க. எனக்கு பதினாறு ரூபாதான் சம்பளம் கிடைக்கும். நல்லதொரு வளமான பிரதேசம் மண்டூர். இங்க இப்படியொரு ஓட்டுத்தொழிற்சாலை ஆரம்பித்து சிறப்பா இயக்கியது பெரிய காரியமாகும். இப்ப இருக்கிற இளைஞர் யுவதிகளுக்கு. ஓட்டுத்தொழிற்சாலையை நவீன தொழிற்சாலையாக மாற்றினால் நிறைய தொழில் வாய்ப்புக்கள் கொடுக்கலாம் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களைவிட மிகவும் வளம் நிறைந்த மாவட்டமாகும். சகல வளங்களும் இங்கு கொட்டிக்கிடக்கின்றது. அவ் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துகின்றபோது. வளமிக்க மாவட்டமாக மட்டக்களப்பை மாற்றியமைக்கலாம். இங்கே ஆங்காங்கே இவ்வாறான தொழிற்சாலைகள் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன. அவற்றை புனரமைப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் மீளக்கட்டியெழுப்ப முடியும். இன்று கைவிடப்பட்ட நிலையில் பற்றைக்காடாக காட்சியளிக்கும் மண்டூர் ஓட்டுத்தொழிற்சாலை மீண்டும் புனரமைக்கப்படுமா? மக்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? அரசாங்கம் இதனைக் கவனத்தில் எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments

Powered by Blogger.