சசிகலாவிடம் 2 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை!

சிறைச்சாலையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தர உறுதுணையாக இருந்த இரண்டு உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன. இது தொடர்பாக சிறையில் ஆய்வு நடத்தி டி.ஐ.ஜி. ரூபா அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவிடம் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த அறிக்கை மீது அவர் நடவடிக்கை எடுக்காததால் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணை அறிக்கையை கர்நாடக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தார்.

அந்த அறிக்கையில். டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்றும் கூறியிருந்தார். ஆனால், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய விவரம் குறித்து அவர் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.

ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 26-ந்தேதியே ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கி விட்டனர்.

விரைவில் அவர்கள் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ஊர்காவல் படையின் அதிகாரியாக பணியாற்றி வரும் ரூபாவையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளனர்.

இதைத்தவிர பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை சூப்பிரண்டு மற்றும் சூப்பிரண்டாக இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தவுள்ளனர்.

மேலும், சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தர உறுதுணையாக இருந்த 2 உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.