இன்றைய கண்டி நிலைவரம் ; திகனயில் மைதானத்தில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகை!!

கண்டியில் இயல்பு நிலைமையேற்பட்ட போதும் அச்சமான சூழ்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றன.

திகனயில் பாடசாலை மைதானத்தில் பெரும்பான்மையினரின் உதவியுடன் இன்றைய ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றுள்ளன.

வழமையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குவரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட குறைந்தளவானோரே இன்று தொழுகைக்கு வருகைதந்திருந்தனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பெண்களை தனியே வீடுகளில் விட்டுச் செல்லமுடியாத காரணத்தாலும் சிலர் நிர்க்கதியான நிலையில் வெவ்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாலும் அச்சம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் தொழுகைக்கு சமுகமளிக்கவில்லை.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதும் தொடர்ந்து அச்ச நிலையிலேயே மக்கள் வாழ்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவு மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

அதேநேரம் மரக்கறிக்கடைகளில் போதியளவு காய்கறிகள் இன்றி காணப்பட்டது. பழக்கடைகளில் பழங்கள் பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்டன. நிலைமை வழமைக்குத் திரும்பாவிட்டால் அடுத்த சில தினங்களில் குறிப்பிட்ட சில உலர் உணவுகளுக்கு தட்டுப்பாடு நிலவலாம் என்ற அச்சமும் காணப்படுகிறது.

ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள எண்டருதென்ன கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு தற்போதும் போதியளவு உதவிகள் சென்றடையவில்லை என அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திகனயில் உள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதால் அங்கு இன்று ஜும் ஆ தொழுகைகள் இடம்பெறவில்லையென்பதுடன் அருகிலுள்ள பாடசாலை மைதானத்தில் இன்று தொழுகை இடம்பெற்றது. இங்கு தொழுகையை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தினர் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.