ஜெனிவாவில் இலங்கை மீது ஐநா மனிதஉரிமை பேரவை கடும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!

இலங்கையில் இன்னமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பிலான அம்சங்களுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான மீளாய்வு அமர்வு நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மனித உரிமைகளுக்கான உதவி உயர்ஸ்தானிகர் கேட்கில்மோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடும் குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியுடன் நீதிப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதிலும் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த காலதாமதம் குறித்து அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்

இந்தநிலையில் இலங்கை ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளை 2019 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சட்டம் நிறைவேற்றப்பட்ட 20 மாதங்களின் பின்னரே காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதையும் உதவி உயர்ஸ்தானிகர் விமர்சித்துள்ளார்.

வடக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கான நட்டஈடுகளை வழங்குவதில் உரிய பொறிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.

அத்துடன் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் தமது சபை அதிக கவனம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகளுக்கான உதவி உயர்ஸதானிகர் குறிப்பிட்டார்.

இதனைத்தவிர சித்திரவதைகள், மனித உரிமை காப்பாளர்கள் மீதாக கண்காணிப்புக்கள் தொடர்வது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமை காப்பு விடயங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பிலும் தமது பேரவை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உதவி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த பரிந்துரைகளை நிறைவேற்றஇலங்கைக்கு காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வின்போது இந்தவலியுறுத்தலை ஜேர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து உட்பட்ட நாடுகள் விடுத்தன.

பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை காட்டி வரும் தாமதம் தொடர்பிலேயே இந்தவலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.