ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்!!


 

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சுமார் 1 வார காலம் தங்குகிறார்.

இந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினி ஆசிபெறுகிறார். ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. சினிமா படப்பிடிப்பு வேலைகள், தொடர்மழை காரணமாக பாபாஜி ஆசிரமம் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. எனவே இந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு ரஜினி செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிடுகிறார். 1 வாரம் கழித்து ரஜினி சென்னை திரும்புகிறார்.

No comments

Powered by Blogger.