மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சீனப் பொருள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!!

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் வலுத்து வரும் நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலும் 100 பில்லியன் டாலர் (10,000 கோடி டாலர் ) வரி விதிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான பொருட்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே 50 பில்லியன் டாலர் வரி விதித்துள்ளது.

தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க சீனா தயார் என்று அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 106 பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சீனா கூறிய நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
பிரச்சனைகளின் தொடக்கம் என்ன?

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்கள் மீது 25% வரியும் அலுமினிய பொருட்கள் மீது 10% வரியும் அமெரிக்கா இந்த ஆண்டின் தொடக்கத்தில் விதித்தது.

இதற்கு எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மீது சீனா மூன்று பில்லியன் டாலர் வரி விதித்தது. அமெரிக்கா விதித்துள்ள வரியால் தங்களுக்கு உண்டாகும் இழப்புகளை ஈடுகட்டவே அந்த வரி விதிக்கப்பட்டதாக சீனா கூறியது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு, சீனா அழுத்தம் கொடுத்து அவர்களின் அறிவுசார் சொத்துரிமைக்கு உட்பட்ட தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள வைத்ததாக குற்றம்சாட்டி சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் இறக்குமதி வரி விதித்தது.

சுமார் 50 பில்லியன் டாலர் முதல் 60 பில்லியன் டாலர் வரி விதிப்புக்கு உள்ளாகும் சுமார் 1,300 பொருட்களின் பட்டியலை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது.
என்ன தாக்கம் உண்டாகும்?

இந்த அறிவிப்புகளை டிரம்பின் குடியரசு கட்சியினர் சிலரே வரவேற்கவில்லை. இந்த வரி விதிப்புகள் அமெரிக்கர்களை பாதிக்கும் என்றும் வேலை இழப்புகளை உண்டாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நுகர்வோருக்கு விற்கப்படும் பொருட்களின் விலை மீது இந்த வரிகள் தாக்கத்தை உண்டாக்கும் என்பதால் இந்த விவகாரத்தை கவனமாக கையாளுமாறு அமெரிக்காவின் சில்லறை வணிக நிறுவனங்களும் அரசை வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா உலக வர்த்தக அமைப்பை நாடியுள்ளது. எனினும், சீனாவின் புகாருக்கு தீர்வு கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.