மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக தேர்வு 19, 20ம் திகதிகளில்!!

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேர்முக தேர்விற்கு வருகை தரும் பொழுது உறுதிப்படுத்துவதற்கான கடிதம் அல்லது சத்தியகடதாசி கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கடிதங்கள் தற்பொழுது வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. 

இந்த கடிதங்கள் கிடைத்ததும் நேர்முக பரீட்சைக்கு வரும் தொண்டர் ஆசிரியர்கள் தாங்கள் பாடசாலைகளில் சேவை செய்ததற்கான உறுதிப்படுத்திய அத்தாட்சி கடிதம் அல்லது சத்தியகடதாசி (கிராம சேவகர் ஊடாக அல்லது சமாதான நீதவான் ஊடாக) கட்டாயம் எடுத்து வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வேண்டுகோள்விடுக்கின்றார். 

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மீதமாகவுள்ள நியமனங்களை வழங்குவது தொடர்பாக இன்று (06.04.2018) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நியமனங்கள் தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற பொழுது, 

வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் 494 பேருக்கு பாடசாலைகளில் சேவை செய்ததற்கான பாடசாலை சம்பள திரட்டு புத்தகத்தில் அவர்களின் பதிவு இன்மை காரணமாக அவர்களுக்கான நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கு மாற்று நடவடிக்கையாக தொண்டர் ஆசிரியர்கள் தாங்கள் பாடசாலைகளில் சேவை செய்ததற்கான உறுதிப்படுத்திய அத்தாட்சி கடிதத்தை அல்லது சத்தியகடதாசியை நேர்முக பரீட்சைக்கு கொண்டு வர வேண்டும். 

இதனை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே நேர்முக பரீட்சைக்கு வரும் தொண்டர் ஆசிரியர்கள் அத்தாட்சி கடிதத்தை கட்டாயம் கொண்டு வரவும். வேறு காரணங்களுக்காக நிராகரிக்கபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது. 

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் கடந்த பல வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வருகின்றது. இது தொடர்பாக நான் பல முறை பிரதமருடனும் எங்களுடைய கல்வி அமைச்சருடனும் நடாத்திய பேச்சுவார்ததையின் பயனாக அண்மையில் முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்கு வழங்கி வைக்கப்பட்டது. மீதமாகவுள்ள 494 பேருக்கு மிகவிரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நான் அன்று தெரிவித்திருந்தேன். 

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து. அதற்கான கடிதங்கள் தற்பொழுது அனுப்பிவைக்கப்படுகின்றன.எனவே இந்த இரண்டாம் கட்டத்துடன் வடக்கு தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான நீண்ட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் கருதுகின்றேன். 

அந்த மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கான இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய முழுமையான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஆனாலும் அதற்கென ஒரு முறை அல்லது நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அதன்படி இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே இந்த இறுதி சந்தர்ப்பத்தை பாதிக்கப்பட்ட அந்த தொண்டர் ஆசிரியர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் இந்த நியமனம் வழங்கப்படமாட்டாது. தற்போது மொத்தமாக 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டுள்ளன. 

இவர்களில் முதல் கட்டமாக 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு அன்மையில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. மிகுதியான 494 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்குவதற்கே தற்பொழுது மேற்படி நேர்முக பரீட்சை நடைபெற உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.