விராட் கோலியின் 4.5 கோடி ரூபாய் பென்ட்லி காரில் என்ன ஸ்பெஷல்?!

கோலிக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு கார்களும் பிடிக்கும். வரிசையாக வீட்டில் பல ஆடி கார்களை அடுக்கிவைத்திருக்கும் விராட் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களும் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட கார் காதலன் கோலியின் கலெக்‌ஷனில் லேட்டஸ்ட் பென்ட்லி.

கோலியின் திறமை உலகத்துகே தெரியும். அதேபோல, ஐபிஎல்-லின் காஸ்ட்லி டீம்களில் ஒன்றான பெங்களூரில் இருக்கும் விராட் போலவே பென்ட்லி நிறுவனத்தின் காஸ்ட்லி கார் இந்த கான்டினென்ட்டல் ஜிடி. இந்த காரின் விலை 4.5 கோடி ரூபாய். விராட்கோலி இந்த சீசன் பெங்களூரு அணிக்கு விளையாடுவதற்கான சம்பளம் 17.5 கோடி ரூபாய்.


கோலி வாங்கியிருப்பது, மூன்றாம் தலைமுறை கான்டினென்ட்டல் ஜிடி. இந்த காரை வடிவமைக்க ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டது பென்ட்லி. காரைப்போலவே விராட் கோலியும் மூன்றாம் தலைமுறை ஸ்டார் என்கிறது கூகுள். முந்தைய தலைமுறைகளுக்கு கிரிக்கெட் காதலை வளர்த்தவர்கள் கவாஸ்கரும் சச்சினும் என்பது யாருக்குதான் தெரியாமல் இருக்கும்? இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளிலேயே 2000 ரன்களை வேகமாகக் கடந்தவர். பெரிய கிரிக்கெட் பரம்பரையெல்லாம் இல்லை என்றாலும், விடா முயற்சியும் பயிற்சியும்தான் விராட்டை உருவாக்கியுள்ளன.

பிரிட்டிஷ் நாட்டு சொகுசு காரையும் காதலோடு கைகளால் மட்டுமே உருவாக்கியுள்ளது பென்ட்லி. 626bhp பவர் மற்றும் 90kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது கான்டினென்ட்டல் ஜிடி. இந்த விலைக்குக் கிடைக்கும் ஆடி, வால்வோ, ஆஸ்டன் மார்ட்டின், லம்போர்கினி போன்றவற்றைவிட பவர் கொஞ்சம் அதிகம். 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க இந்த காருக்கு 3.7 நொடியே போதும். மூன்று சொடக்குப் போட்டு நான்காவது சொடக்குப் போடும்போது கார் 120 கி.மீ வேகத்தைத் தொட்டிருக்கும். விராட் கோலி வேகமாக ஓடி ரன் சேர்ப்பவர் அல்ல. ஆனால், 4/6 அதிகம் இல்லாமல் க்ரீஸுக்கு ஓடி 100 ரன்னைக் கடந்த முதல் இந்திய வீரர் விராட் கோலி. 


இந்த காரில் 6 லிட்டர் W12 variable displacement technology கொண்ட ட்வின் டர்போ இன்ஜின் உள்ளது. சில நேரங்களில் இந்த இன்ஜின் விராட் கோலிபோல மேஜிக்கும் செய்யும். உதாரணம், ஜூலை 21, 2016. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட். முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், களமிறங்குகிறார் கேப்டன் கோலி. அந்த ஆன்டிகுவா இன்னிங்ஸில் கேப்டனாக தனது முதல் இரட்டைச்சதத்தை அடித்தார் விராட். 61 மாதங்களில் ஓர் இரட்டைச்சதம்கூட அடிக்காதவர், அடுத்த 16 மாதங்களில் ஐந்து இரட்டைச்சதங்களை விளாசினார். ஹூம்... மேஜிக் மேன் விராட்!

பென்ட்லியின் மேஜிக் என்ன தெரியுமா? 12 சிலிண்டர்கள்கொண்ட இந்த இன்ஜின் மிதமான வேகத்தில் போகும்போது, ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வேலைசெய்யும். கொஞ்சம் ஆக்ஸிலரேட்டரை அழுத்திப்பிடித்தால் 12 சிலிண்டர்களும் ஒன்றாக வேலைசெய்து விராட் கோலி போலவே உக்கிரமாக பவரை வெளிப்படுத்தும். கான்டினென்ட்டல் ஜிடி-யில் மூன்று ஏர் ஸ்பிரிங் உள்ளன. இதனால் கார் ஓட்டும்போது வேகம் மற்றும் ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும்படி தேவையான அளவு உயரத்தை காரே தேர்வுசெய்துகொள்ளும். 48V ஆக்டிவ் ரோல் கன்ட்ரோல் சிஸ்டம் எனும் தொழில்நுட்பம் கார் போகும் சாலையைப் பார்த்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். கேப்டனானபோது கோலியும் தன்னை மாற்றிக்கொண்டார். வெறும் பேட்ஸ்மேனாக இல்லாமல், விளையாடிய 46 மேட்சில் 31 வெற்றி, 3 டிரா. 2017-ம் ஆண்டின் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் விராட். அதுமட்டுமல்ல, விளையாடிய 31 போட்டிகளில் (45 இன்னிங்ஸ்கள்) 2,907 ரன் குவித்துள்ளார். 


கான்டினென்ட்டல் ஜிடி-யின் அதிகபட்ச வேகம் 333 கி.மீ. எல்லா சாதனைகளையும் வேகமாக உடைத்து சாதனைக்கெல்லாம் சாதனை படைக்கும் விராட் கோலியின் சமீபத்திய டாப் ஸ்பீடு ரெக்கார்டு எது தெரியுமா? குறைந்த இன்னிங்ஸில் (363) 17,000 இன்டர்நேஷனல் ரன்னைக் கடந்த முதல் வீரர். கான்டினென்ட்டல் ஜிடி பழைமையும் புதுமையும் சேர்ந்தது. காரின் உள்ளே முழுவதும் மரவேலைப்பாடுகள், சாஃப்ட்டான லெதர் சீட்டுகள், க்ளாசிக் டிசைன், ஹை-டெக் கேபின், டேஷ்போர்டில் சாதாரண கைக்கடிகாரம்போல மூன்று டயல்கள்தான் இருக்கும். தேவையென்று வரும்போது, டயல்கள் உள்ளே சென்றுவிட்டு 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வெயியே வரும்.

இன்டீரியர் டிசைனில் சாதாரணம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. எல்லாமே பேட்டர்ன்கள்தான். பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துபோகாமல் இருக்க இந்த பேட்டர்ன்கள், நம் மூடுக்கு ஏற்றமாதிரி மாறும் மூடு லைட் செட்டப். 22 இன்ச் அலாய் வீல். அரை கிலோமீட்டருக்குமேல் வெளிச்சம் காட்டும் மேட்ரிக்ஸ் LED லைட்டுகள். ஜிடி-யின் அம்சங்கள் சொல்வதற்கு இந்தக் கட்டுரை பத்தாது.

போட்டியாளர்களான ரோல்ஸ் ராய்ஸ் wraith, வேகம் குறைவானது, ஆஸ்டன் மார்ட்டின் vanquish வேகம், வசதி இரண்டுமே குறைவானது, ஃபெர்ராரி முழுமையான ஸ்போர்ட்ஸ் கார் என்பதால், நம்ம ஊர் சாலைகளுக்கு செட் ஆகாது. எல்லாவற்றுக்கும்மேலாக பென்ட்லி இப்போது ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திடம் இருக்கிறது. விராட் கோலியின் கார் பட்டியலில் இது ஆறாவது ஃபோக்ஸ்வாகன் கார். விராட் கோலியிடம் கார் பட்டியல்போல சில சாதனைப் பட்டியலும் இருக்கின்றன. 

சச்சினின் 49 செஞ்சுரிக்குப் பிறகு, கோலி அடித்த 34 ODI செஞ்சுரிகள்தான் ரெக்கார்டு. 

இந்திய கேப்டனாக இருந்து அதிக ODI செஞ்சுரிகளை அடித்தவர் கோலி. கங்குலியின் 11 செஞ்சுரிகளே ரெக்கார்டாக இருந்த நிலையில், 13 செஞ்சுரிகளை அடித்துள்ளார் கோலி.

டி-20-யில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்னைத் தொட்ட கெவின் பீட்டர்சனின் ரெக்கார்ட்டை, அசால்ட்டாக முறியடித்துவிட்டார் கோலி. 

கேப்டனாக ரிக்கி பாண்டிங் ஒரே ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,426 ரன்களை அடித்துவிட்டுச் சென்றார். சரியாக பத்து வருடங்கள் கழித்து, விராட் கோலி 1,460 ரன்னை அடித்து அந்தச் சாதனையையும் உடைத்துவிட்டார்.

205 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 9,000 ரன் அடித்த ஏபி டீவில்லியர்ஸின் சாதனையை, 194 இன்னிங்ஸிலேயே இவர் நொறுக்கிவிட்டார். 

சாதனைகளை உடைத்தால் மட்டும் போதாது, புதிய சாதனைகளை உருவாக்கினால்தானே அவர் ஹீரோ. வரலாற்றிலேயே அனைத்துவிதமான கிரிக்கெட் ஃபார்மட்டுகளிலும் ஆவரேஜ் 50 வைத்திருப்பவர் விராட் கோலிதான்.

இரண்டு அணிகளுக்குள் நடைபெறும் Bilateral ODI மேட்ச்களில் ஆறு முறை 300 ரன் அடித்துள்ளார். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் நான்கு முறைக்குமேல் இந்த ஸ்கோரை எட்டியதில்லை.

கோலி, பென்ட்லி இரண்டுமே கெத்துதான். 4.5 கோடி ரூபாய்க்கு பென்ட்லி வொர்த்தா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது. நட்சத்திர வீரர், இந்திய அணியின் கேப்டன், அதிவேக ரன் ஸ்கோரர் என்பதை வைத்துப்பார்க்கும்போது 17.5 கோடிக்கு விராட் கோலி வொர்த்தானவர்தான். ஒருவேளை இது ஒரு போட்டியாக இருந்திருந்தால் வின்னர் விராட் கோலிதான்.

பென்ட்லிக்கு வாழ்த்துகள் விராட் கோலி!

No comments

Powered by Blogger.