பிரதமர் மோடி வருகையால் சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாபலிபுரம் அருகே திருவிடந்தையில் நடக்கவிருக்கும் ராணுவ தளவாட கண்காட்சியிலும், அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் சென்னை விமான நிலையம், நேற்று காலை 6 மணி முதல் 5 அடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியிலிருந்து சிறப்பு பாதுகாப்புப் படையை சேர்ந்த 60 பேர் டி.ஐ.ஜி சர்மா தலைமையில், சென்னை வந்துள்ளனர். 


விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே விமான நிலையத்துக்குள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கார் நிறுத்தும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான டிக்கெட் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் விமான நிலைய வளாகத்துக்குள் வேறு யாருக்கும் அனுமதியில்லை. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுத படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், பிரதமர் வருவதால், அவர் செல்லவிருக்கும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.