600 வருடங்களாக பாண்டிருப்பில் பாதுகாக்கப்படும் பழமையான மகா பாரத எடு தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் பொக்கிசம்!

                                                                                          -செ.துஜியந்தன் -
கிழக்கில் மிகத்தொன்மை வாய்ந்த மகா சக்தி ஆலயமாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் (தீப்பள்ளயம்) அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த தாதன் மா முனிவரால் கொண்டுவரப்பட்ட பல பொருட்கள் இன்றும் பாதுகாப்பாக இருக்கின்றது.

கல்முனைப் பிரதேசம் தமிழர்கள் அரசாட்சி புரிந்த இடம் என்பதற்கான பல்வேறு
தடயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கடந்த 600 வருடங்களாக பாண்டிருப்பில் பாதுகாக்கப்படும் மகாபாரத ஏடு விளங்குகின்றது.

அக் காலத்தில் மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்து ஆட்சி புரிந்த எதிர்மன்ன சிங்கன் கி.பி.1539 முதல் கி.பி.1583 வரையான காலப்பகுதியில்சுமார் 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளான். இது கலியுகம் பிறந்து 4640 ஆம் ஆண்டுப் பகுதியாகும் அப்போதுதான் எதிர்மன்ன சிங்கன் மன்னனுக்கு முடி சூட்டப்பட்டிருக்கின்றது.

இக் காலப்பகுதியில் தான் வட இந்தியாவில் இருந்து தாதன் எனும் மாமுனியும்
அவரது ஆட்களும் இலங்கையின் கிழக்குகரையை வந்தடைந்துள்ளனர். அவ்வாறு வந்தவன் மட்டக்களப்பினூடாக தெற்கே பயணித்து அப்போது நாகர்முனை என

அழைக்கப்பட்ட தற்போதைய திருக்கோவில் பகுதியை சென்றடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கிழக்கு நோக்கி பயணித்து பாண்டிருப்பை வந்தடைந்து திரௌபதை அம்மனுக்கு கொக்கட்டிமரத்தடியின் கீழ் கொத்துப்பந்தல் மூலம் கோவில் அமைத்து பாண்டவர்கள் சிலையை வைத்தும் வழிபாடு செய்து வந்துள்ளார்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு கண்டி மாநகரை ஆட்சி புரிந்த
விமலதர்ம சூரியன் எனும் மன்னன் கி.பி.1594 முதல் கி.பி. 1604 வரையான காலத்தில் வருகைதந்து வழிபட்டுச் சென்றுள்ளான். இம் மன்னனின் ஆட்சிக்கு முன்னரே தாதனின் வருகை இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதன்போது அவர் கையோடு கொண்டுவந்த மகாபார ஏடு படித்து மக்கள் மத்தியில் மகாபாரதக் கதையினை சொல்லி தர்ம நெறியில் மக்களை வழிப்படுத்தியுள்ளார்.

தாதன் கொண்டுவந்த மகாபாரத ஏடானது இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முற்பட்ட ஏடாகவுள்ளது. இவ் ஏடு இன்றும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் உற்சவ காலங்களில் மகாபாரத பாராயணம் நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனையிலுள்ள தமிழ்கிராமங்கள் அனைத்தும் வரலாற்று பழமையினை தன்னுள்ளே வைத்திருக்கும் கிராமங்களாக திகழ்கின்றது. பாண்டிருப்பிலுள்ள மகாபாரத ஏடு தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் ஒரு பொக்கிசமாகும். இதனை எமது தலைமுறையினர் பேணிப்பாதுகாக்கவேண்டும்.


No comments

Powered by Blogger.