படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

                                                                                           - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரெட்ணம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வும், கவனயீர்ப்பு போராட்டமும் மட்டு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டு –அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடக ஜாம்பவான் சிவராம் திருவுருவப் படத்திற்கு அவரது மூத்த சகோதரி மலர்மாலை அணிவித்தார். அதன் பின் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுடர் ஏற்றி அஞ்சலி
செலுத்தினார்கள்.

இங்கு கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு நீதி வேண்டி கையெழுத்து வேட்டையும் இடம் பெற்றது. வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களில் ஒரு ஊடகவியலாளரின் விசாரணையைக் கூட இது வரை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை. எனவும் அதனை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.