கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம், நடேசன் மற்றும் ஜேசப்பரராசசிங்கம் ஆகியோருக்கு மட்டக்களப்பில் சிலை அமைக்குமாறு காந்தி சேவா சங்கம் கோரிக்கை!

                                                                                            - செ.துஜியந்தன் -
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம், ஐயாத்துரை நடேசன், ஊடகவியலாளராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஜோசப்பரராசசிங்கம் ஆகிய மூவருக்கும் மட்டக்களப்பு பொது நூலக தினசரிப் பத்திரிகைகள் வாசிக்கும் மண்டபத்தினுள் மார்பளவு உயரமான சிலைகளை வைப்பதற்கு மட்டு மாநகரசபை நடவடிக்கை எடுத்து ஊடகத்துறையினருக்கு உயர்ந்த கௌரவத்தினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் மாநகர முதல்வரிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகிசிவராமின் 13 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கோரிக்கைவிடுத்துள்ளதுடன் அது தொடர்பான மகஜர் ஒன்றையும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனிடம் கையளித்துள்ளார். 

ஊடகவியலாளர் தராகி சிவராமின் நினைவு தின நிகழ்வுகள் கிழக்குமாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது
வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள்,
பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் விடுத்துள்ள வேண்டுகோளில் அங்கு தெரிவித்ததாவது....

ஊடக கலாசாரத்தை படுகொலைகளை, இன அழிப்புக்களை நிராகரித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக அகிம்சை ரீதியாக பேனா என்னும் ஆயுதத்தை மட்டும் கையிலெடுத்து அல்லும் பகலும் அயராது உழைத்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிகபட்ச உட்சமாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை பத்தி பத்தியாக விமர்சனங்களை ஆய்வுக்கட்டுரைகளை ஆணித்தரமாக உள்ளுரிலும் சர்வதேசத்தின் பார்வைக்கும் எடுத்துக் காட்டியவர் ஊடகவியலாளர் தராகி சிவராம். இவர் இலங்கை பாராளுமன்ற வளாகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் வைத்த 2005 இல் திட்டமிட்ட முறையில் அரச ஒத்துழைப்புடன் இனம் காட்டிக்கொள்ளாத கொலையாளிகளால் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தவரிசையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். படுகொலை செய்யப்பட்ட சிங்க மொழி பேசும் ஊடகவியலாளருக்கு காட்டும் கரிசனை எமது தமிழ் ஊடகவியலாளருக்கு காட்டப்படவில்லை. இதை எமது காந்தி சேவா அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படவேண்டும். மட்டக்களப்பு மண்ணிலே ஊடகவியலாளரான ஐயாத்துரை நடசேன் மற்றும் ஊடகவியலாளராகவும் பாராளுமன்றப் பிரதிநிதியாகவும் இருந்த மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் ஆகியவர்களும் படுகொலை செய்யப்ட்டிருந்தனர்.

கொல்லப்பட்டஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் செய்துவருகின்றோம். அஞ்சலி நிகழ்வு மட்டும் போதாது அரசாங்கம் விசாரணைகளைத் துரிதப்படுத்தி ஊடகவியலாளர்களுக்கான நீதியை நிலைநிறுத்த வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும். மட்டக்களப்பு பொதுநூலகத்தின் தினசரி பத்திரிகை படிக்கும் மண்டபத்தினுள் சிவராம், நடேசன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியவர்களது மார்பளவு சிலைகளை வைப்பதற்கு மாநகர சபை முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான நிதியினை மக்களிடம் இருந்து பெற்றுத்தரும் பணியினை காந்தி சேவா சங்கம் முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.