மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சிரியாவில் மீண்டும் இரசாயன ஆயுத தாக்குதல்.... நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி.?

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள கூட்டாவின் டுமாநகரின் மீது இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியாளர்களும் மருத்துவ பணியாளர்களும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இதனை உறுதிப்படுத்தும் படங்களை வெளியிட்டுள்ளனர்.

பல அமைப்புகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சிக்காரர்களின் கூட்டா ஊடக நிலையம் 75 பேர் மூச்சுதிணறி இறந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

ஹெலிக்கொப்டரில் இருந்து இரசாயனவாயு அடங்கிய பரல் குண்டுகள் வீசப்பட்டன என கூட்டா ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவை சேர்ந்த தொண்டர் மருத்துவ அமைப்பொன்று 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

சுமார் 180 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பின் பேச்சாளர் எறிகணை வீச்சு தொடர்ந்து இடம்பெறுவதால் அந்த பகுதிக்கு சென்று உயிரிழப்பை உறுதி செய்ய முடியாமலுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகளை உடைய பலருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த தகவல்களை சிரியா நிராகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.