"காவிரிக்காகத் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினால் நாடே அதிரும்!’ - திருச்சியில் சூளுரைத்த கமல்!!

''காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும்'' என திருச்சியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். 


திருச்சி ஜி கார்னர் பகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காவிரிப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததற்கான கண்டனப் பொதுக்கூட்டம்' என்று அந்தக் கூட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஈரோட்டைச் சேர்ந்த சஜீனா என்பவரை மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றிவைக்க கமல் அழைத்தார். அதன்படி, சஜீனா மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றிவைக்க, கண்டனப் பொதுக்கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்த திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மேடையில் கமலுக்கு அருகில் அமர வைக்கப்பட்டனர். அதேபோல, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட ராஜேஷும் மேடையில் இருந்தார். மதுரை பொதுக்கூட்டத்தைப் போலவே இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தையும் பாரதி கிருஷ்ணகுமாரே ஒருங்கிணைத்தார். இந்தக் கூட்டத்தில், பல்வேறு தரப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். 


நிர்வாகிகள் மற்றும் விருந்தினர்கள் சிலர் பேசிய பின்னர், சுமார் 8.30 மணிக்கு மேல் மைக் பிடித்த கமல்ஹாசன், ``காவிரிப் பிரச்னையை மய்யம்கொள்ளும் இடமாக இந்த மேடை இருக்கிறது.கடந்த 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்துவருகிறது. மத்தியில் நடக்கும் அரசை நீங்கள் குற்றம் சாட்டவில்லையே எனக் கேள்வி எழுப்புகின்றனர். மத்திய அரசு செய்வது தவறு. இதுக்கு மேல் எப்படி அழுத்தமாகக் கூற முடியும்? இதற்கு மேல் கூறினால் அவமரியாதை செய்வதுபோல ஆகிவிடும். மக்கள் நீதி மய்யம், ஒருநாளும் மற்றவர்களை அவமதிக்காது. 

நாசமாய்ப் போன அரசியல் மாண்பை மீட்டெடுப்பதே என் கனவு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை திசைதிருப்ப முயலாதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். சுதந்திரத்திற்காக நாம் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தோம். அது உலகிற்கே முன்மாதிரியான இயக்கம். மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது இதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், அமைதியான முறையில் தமிழகம் உங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும். ஜாக்கிரதை என்றெல்லாம் மிரட்ட மாட்டேன். வேண்டாம் எனக் கூறுகிறேன். கம்பெடுத்து வீடு கட்டி, தொடை தட்டுவதுதான் வீரம் என்றில்லை. வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை.


அரிசி தவிர வேறு தானியம் நாங்கள் உண்பதில்லை. நம்மைப் போலவே அவர்களும் முன்னோக்கிச் செல்பவர்கள்தான். எல்லாரும் பிரச்னை பற்றிப் பேசுகிறார்கள். இதெல்லாம் நியாயமான விவாதங்கள்தான். மக்கள் நீதி மய்யம் நிறைய அறிஞர்களிடம் பேசி, தீர்வை நோக்கிச் செல்கிறது. அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்வை நோக்கிச் செல்ல, தமிழக அரசு நகர மறுக்கிறது. காவிரி நீருக்காகக் கெஞ்சும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். மத்திய அரசின் முதுகில் ஒளிந்துகொள்கிறது தமிழக அரசு. நீங்கள் செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள். செய்வதற்கு எங்களிடம் ஆள்கள் இருக்கிறார்கள். மய்யம்னா என்ன? நடுவில் நிற்பதா? நல்லவர்களிடம் நிச்சயம் சேருவோம். நிச்சயம் நல்லவர்கள் பக்கமே சாய வேண்டும் என்பது எங்களின் திண்ணமான முடிவு’’ என்று பேசினார். அதன்பின்னர், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள்குறித்து கமல் விரிவாக விளக்கினார். 


இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுகுறித்து அறிஞர்கள் சிலரிடம் கமல்ஹாசன் கருத்துக் கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன. கமலுக்கு முன்னதாகப் பேசிய பாரதி கிருஷ்ணகுமார், சமீபத்தில் சென்னையை அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கமல்ஹாசன் பேசியதைக் குறிப்பிட்டார். மேலும், `` 'ஊழலை ஒழிக்க, லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர முதல் கையெழுத்துப் போடுவேன்' என கமல் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இரண்டாவது கையெழுத்து எதற்காகப் போடுவீர்கள் எனக் கேட்டேன். 'மனித மலத்தை அள்ளும் திட்டத்துக்கு முடிவு கட்டுவேன்' என்றார் கமல். 'மலம் அள்ளுபவர்களை அரசுப் பள்ளிகளில் துப்பரவுப் பணியாளர்களாக பணியமர்த்துவோம்' என்று கமல் கூறினார். 'சாதி மறுத்து பள்ளியில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு, ஒதுக்கீடு வழங்கும் கேரள சட்டம் தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும். அதற்காக மூன்றாவது கையெழுத்துப் போடுவேன்' என கமல் என்னிடம் சொன்னார்’' என்றார்.

No comments

Powered by Blogger.