மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


அரசு எதிர்ப்பு ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் இருந்து நீக்கியதா ட்விட்டர்?


'தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தியா' என்று பொருள் தரும் #IndiaBetraysTamilNadu என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழகப்பிரச்சனைகள் குறித்துபல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததால்இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.

இந்நிலையில் திடீரென அந்த ஹேஷ்டேக் ட்விட்டரின் ட்ரெண்டிங்கிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறி அதற்கான காரணம் குறித்தும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதம் நடந்துவருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் பிரச்சனை, நெடுவாசல், வரிவிதிப்பு மற்றும் மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல பிரச்சனைகளில் பாஜகவின் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகக் குறிப்பிடும் பதிவுகள் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பதிவிடப்படுகின்றன. தமிழகம் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிருந்தும் கடந்த சில நாட்களாக பதிவுகள் இடப்படுகின்றன.

இந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் பலரால் ட்விட்டர் தளத்தில் பயன்படுத்தப்பட்ட போதும், ட்ரெண்டிங் பட்டியலிலிருந்து அதை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருப்பதாகவும், சமூகத்தின் மனநிலையை அறிய மோடி அரசு அஞ்சுகிறது என்றும் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தபோது, செந்தில்நாதன் கூறிய கருத்து , "ட்விட்டர் ட்ரெண்டிங்கிலிருந்து இந்த ஹேஷ்டேக் நீக்கப்பட்டதற்கு அரசுதான் காரணம். சமூக ஊடகங்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்று அரசாங்கம் நினைப்பது அடிக்கடி மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகளிலேயே தெரிகிறது. வெகுஜன ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்த முடிடியாதவற்றையே மக்கள் சமூக வலைதளங்கள் வழியாக கூறும் நிலையில், அதை தணிக்கை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயல்படுகின்றன" என்று கூறினார்.

ட்விட்டர் ட்ரெண்டிங் என்றால் என்ன?

சமூக வலைத் தளமான ட்விட்டர் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி ஜாக் டோர்ஸி, நூஹ் கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், உலகம் அளவிலும் மற்றும் குறிப்பிட்ட நாடுகள், நகரங்களில் நடைபெறும் அல்லது பேசப்படும் செய்திகளில் முதன்மையானதை, குறிப்பிட்ட சில கணினி அளவீடுகளின் மூலம் கண்டறிந்து ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கும் ட்விட்டர் ட்ரெண்டிங் சேவைய கடந்த 2008 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கியது.

ட்விட்டர் ட்ரெண்டிங் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

"குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தலைப்பைப் பற்றிய ட்வீட்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும் போது, அதில் பயன்படுத்தப்பட்ட தலைப்பு ட்ரெண்ட்ஸ் பட்டியலில் நுழைகிறது" என்று ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

சில வேளைகளில், ஒரு பிரபலமான ட்வீட்டின்/ஹேஷ்டேகின் பரவல் மக்கள் நினைக்கும் அளவுக்கு அதிகளவில் இல்லையென்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று ட்விட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த உரையாடலின் வேகம் சராசரி நாளின் உரையாடலின் அடிப்படை நிலைக்கு நிகராக, விரைவாக அதிகரிக்கவில்லை என்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் கூறுகிறது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஒரு ஹேஷ்டேக் இடம்பெற விதிகள் உள்ளதா?

கணினி சார்ந்த அளவீடுகளின்படி, ட்விட்டரின் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவதற்குரிய தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் பிரபலத்தன்மை குறையும்போது அவை நீக்கப்படுகின்றன.

ஆனால், தனது தளத்தில் ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கெதிராக இருக்கும் தலைப்பு ட்ரெண்டிங் பட்டியலில் சேர்க்கப்படாது அல்லது நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, அவதூறு பரப்பக்கூடிய தலைப்புகள், ஆபாசம், இனம், தேசம், பாலியல் விருப்பு, பாலினம், பாலின அடையாளம், மதச் சார்பு, வயது, ஊனம் அல்லது நோய் போன்றவற்றின் மீது கிளர்ச்சியை தூண்டும் கருத்துகளை பதிவிட்டால் அவை ட்ரெண்ட்டில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படலாம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட தலைப்பின் சாத்தியமான விதிமீறலை மதிப்பீடு செய்யும்போது, அதன் தரத்தையும் அல்லது அதுகுறித்து மக்கள் காட்டும் விருப்பத்தையும் கருத்திற்கொண்டு, அது ட்ரெண்டிங் பட்டியலில் தொடரலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ட்விட்டரின் விதிமுறைகள் கூறுகிறது.

ட்ரெண்டிங் பட்டியலிலிருந்து ஒரு ஹேஷ்டேகோ அல்லது உள்ளீடோ நீக்கப்பட்டாலும் அதை பயன்படுத்தி பதியப்பட்ட பதிவுகள் ட்விட்டரிலிருந்து நீக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

"உலகம் முழுவதும் அரசாங்கங்கள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அந்நாட்டு சட்ட விதிகளின்படியே செயல்படுகிறது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை ட்வீட் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு அது முதல் பத்து இடங்களில் இடம் பெறாமல் போனதோ அல்லது அரசாங்கம் விடுத்த கோரிக்கையோ காரணமாக இருக்கலாம்" என்று தகவல் தொழில்நுட்ப வல்லுனரான மணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.