மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும்!

                                                                                    - க.விஜரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து -ஸ்ரீநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ள சம்பவம் பற்றி அவரது அலுவலத்தில்(9.4.2018) வைத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:-மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு காய்த்து விற்றல் தொழில் அதிகரித்துள்ளது.இதனால் வறுமைப்பட்ட பொதுமக்களின் பொருளாதாரம் வீணடிக்கப்படுகின்றது.வறுமைப்பட்ட குடும்பங்களின் கல்வி,சுகாதார, ஜீவனோயம் போன்றவற்றுக்கு தினமும் வறுமைப்பட்ட குடும்பங்கள் கஸ்டப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டம் போதைப்பொருள்,வறுமை,கல்வியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது.கசிப்பு உற்பத்தி தொழில் காரணமாக அதிகமான வறுமைப்பட்ட குடும்பங்கள் பொருளாதாரத்தை சேகரிப்பதில் பாரிய சிக்கல்களையும்,சவால்களையும் எதிர்கொண்டு நடுத்தெருவில் நிற்பதை மாவட்டத்தில் அவதானிக்கலாம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை,வவுணதீவு,பட்டிப்பளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவில்தான் கசிப்புத்தொழில் அதிகரித்துள்ளது.இவ்விடயமாக மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மாதிபர் யாகொட ஆராய்ச்சி அவர்களின்கவனத்திற்கு எட்டிவைக்கப்பட்டது.யுத்தத்தினால் நலிவுற்ற வறுமைப்பட்ட குடும்பங்களும்,தொடர்ச்சியான வறுமையினால் அல்லல்படும் குடும்பங்கள் பாரிய சாவால்களுடன் வாழும்போது கசிப்பு உற்பத்தி தொழில் பாரிய பிரச்சனையாக இப்பிரதேசத்தில் உருவெடுத்துள்ளது.இதுவரையும் கசிப்பு குடித்து பலர் மரணித்துள்ளார்கள்.இன்னும் பலர் சமூகத்தில் நோயாளிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.கசிப்புத்தொழில்கள் பல கிராமங்களில் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சில சம்பங்களே பொலிசாரினால் முற்றுகையிட்டு பிடித்து நீதிமன்றில் அவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொலிசாரும்,பொலிஸ் நிலையங்களும் வினைத்திறனுடன் செயற்பட்டு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்திக்களை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும்.இரண்டு வாரங்களுக்குள் மாவட்டத்தில் கசிப்புத்தொழிலை ஒழிப்பதற்குரிய துரித வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.யாராக இருந்தாலும் பொலிசார் பக்கச்சார்பின்றி உரியவரை சட்டத்திற்கு முன்னிறுத்த வேண்டும்.

தற்போது குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் கசிப்பு காய்த்தல்,விற்றல் தொழில் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள்,பெண்கள்,மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலை கட்டுப்படுத்துவதற்குரிய துரித நடவடிக்கைகளை மாவட்ட மதுவரித்திணைக்களம்,கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மாதிபர் அலுவலகம்,பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.