மெய்யநாதன் கேதீஸ்வரனின் 'சகதிப்புழுக்கள்' நாடகத்திற்கான அறிமுகக்குறிப்பு!!

                                                                                          - செ.துஜியந்தன் -
மெ.கேதீஸ்வரனின் சகதிப்புழுக்கள் நாடகப்பிரதி நூல் வெளியீட்டு விழா சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவக இராஜதுரை அரங்கில் மட்டக்களப்பு தேசிய கல்லூரி பீடாதிபதி சிவ.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். நூலின் முதற் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத் தலைவர் வி.றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொண்டார். சிறப்பு அதிதிகளாக கலாநிதி சி.ஜெயசங்கர், சிரேஸ்டவிரிவுரையாளர் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நூல் அறிமுக உரையினை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸன் நிகழ்த்தினார். 

நூல் அறிமுகவுரையினை நிகழ்த்திய கலைஞர் சிரேஸ்டவிரிவுரையாளர் க.மோகனதாஸ் அங்கு தெரிவிக்கையில்....

அரங்கின் முக்கிய மூலமாக நாடக ஆசிரியர் விளங்குகின்றார். அரங்க நிகழ்வில் அவர் நேரிடையாக பங்குபெற்றாலும், பெறாவிடினும் அவருடைய எழுத்து வடிவில் உள்ள நாடகப் பனுவல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்நாடகப் பனுவலானது வாசகருக்கோ அல்லது பார்வையாளருக்கோ செய்தியினைக் கூறும் பொருட்டே படைக்கப்படுகின்றன என்றாலும் இவை ஒலி, சைகை, படம், வசனம், எழுத்து எனப் பல வடிவத்தில் அமைந்த எண்ணிறைந்த குறிகளின் ஒருங்கிணைவால் கட்டப்படுகிற பனுவல்கள் எனலாம். இவ்வகையான நாடகப் பனுவல் கவிதை வடிவிலோ அல்லது வசன வடிவிலோ இரண்டும் சேர்ந்த வடிவத்திலோ எழுதப்படுகின்றன. 

'நாடக ஆசிரியரால் வடிக்கபெற்ற நாடக இலக்கியம் என்பது சொற்களைக் கோர்த்து தருவதல்ல. சொல் நயமோ, பொருள் நயமோ இருக்கிற காரணங்களைக் கொண்டு மாத்திரம் இலக்கிய வடிவமான நாடகம் நாடகமாக வேண்டியதில்லை. உள்ளக் கிடங்கினையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், கனல் தெறிக்கும் வசனங்களால் பீறிட்டு வெளிக் கொணரச் செய்வதால் மட்டும் நாடகம் தோன்றிவிட முடியாது. சந்தமிக்க நடை, இரட்டுற மொழிதல், படிமங்களைத் தோற்றுவிக்கும் வாக்கிய அமைப்புகள், தத்துவார்த்த தர்க்க வாதங்கள், கருத்துச் செறிவு, குறியீட்டுச் சாதகங்கள், உவமைகள், பிற அணிகள், பாண்டித்தியம் மிக்க மொழி ஆகியவையெல்லாம் கைக்கொண்டால் நாடகம் உருவாகிவிடும் என்பதல்ல. இலக்கியம் என்ற அளவில் நாடகம் இவை அனைத்தையும் உட்கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் அது ஒரு காட்சிக் காவியம் கூட அரங்கப் படைப்பிற்குரிய சாத்தியக் கூறுகளையும், சிருஷ;டி உத்வேகத்தையும் தன்னுள் பதிப்பித்துக் கொள்ளும் போதுதான் அவ்விலக்கியம் நாடகமாகிறது' என நாடகப் பனுவல் பற்றி இராமானுஜம் கூறுகிறார்.

அரங்க ஆற்றுகையைப் பொறுத்தவரையில் 'நாடகங்களின் சொற்கள் இரண்டாம் பட்சமாகத்தான் நிற்கிறது. காட்சிப்படிமம், சைகைகள், செயல், மேடை நகர்வுகள் போன்றவை சேர்ந்துதான் அர்த்தம் கொடுக்கின்றன அல்லது நாடக உள் அர்த்தத்தை முழுமைப்படுத்துகின்றன'. நாடகத்தில் இடம்பெறுகின்ற சொற்கள் பற்றி இந்திரா பார்த்தசாரதி பின்வருமாறு கூறுகின்றார். 'தொடர்ந்து நிகழும் சமுதாய நிர்ப்பந்தத்துக்கு ஒரு நிரந்தர ஏற்பாடு 'சொல்'. இது ஒன்றுதான் காலத்தை வென்று நிற்கக்கூடிய ஆற்றல் பெற்றது. ஷேக்ஸ்பியர், காளிதாசன் போன்ற நாடக ஆசிரியர்கள் சொல்லை இலக்கியமாக ஆக்கிவிட்ட குற்றத்தைச் செய்து இருக்கலாம். ஆனால் நாடகப் பாரம்பரியம் ஷேக்ஸ்பியரை ஒதுக்கிவிட முடியாது. அவைதான் இன்றும் கால, இட வரையறைக்கு அப்பாற்பட்டதாய் நிலைத்து நிற்கின்றன' என நாடகத்தின் சொற்களின் அவசியத்தை குறிப்பிடுகின்றார்.

சிதறிப்போன பிம்பங்களும், கலைந்து போன கனவுகளுமாக மலையக மக்கள் சிக்கலான வாழ்வு முறைக்குள் இயங்குகிறார்கள். இந்தத் தளத்தில்தான் கேதீஸ் தனது சமூகத்தின் வாழ்வைத்தரிசிக்கிறார். தம்முடைய நாடகங்களில் சிதறுண்ட முகமிழந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். இன்றைய யதார்த்தத்தின் சில வினோதமான சித்திரங்களை ஒப்பனைகளற்று நம் கண்முன்னே நிறுத்துகிறார். வெறும் உரையாடலை மடக்கிப் போட்டுக் கதை சொல்வது என்ற நிலையில் இந்தப் பிரதிகள் இயங்காமல் கதையிலிருந்து கதையை அழித்து வாழ்க்கைக்கும் ஆற்றுகைக்குமிடையிலான நுட்பமான கோட்டை இவை விலக்க முயற்சி செய்கின்றன. 

பேராசிரியர் மௌனகுரு அவர்கள் 'எழுத்து, உரையாடல் முக்கியத்துவத்தை விட மேடைக்கே அதிகம் முக்கியமளிகப்பட்டிருப்பதை அவதானித்தேன். அவ்வகையில் இதனை ஓர் ஆற்றுகை பிரதி நாடகங்கள் என அழைக்கலாம். படிப்பதற்குரியன என்பதனை விட நடிப்பதற்குரியன எனலாம்' எனக்குறிப்பிடுகின்றார். இக்கருத்தியலுடன் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் அவர்களும் 'ஒரு மாணவ அரங்கியலாளராக, கேதீஸின் நாடகப் பிரதிகள் அதனளவில் முழுமையானவையாக இருந்தாலும் அவை பெரும்பாலும் ஆற்றுகையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, துண்டு துண்டு காட்சிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட நாடகப்பிரதிகள் போல் தோற்றமளிக்கின்றன' எனத் தெரிவிக்கின்றார்.

எழுதப்படுவதால் மட்டும் நாடகம் முழுமையடைவதில்லை. நிகழ்த்தப்படும் போதுதான் அவை முழுமை அடைகின்றன. இவரது நாடகப்பிரதிகள் ஆற்றுகையிலிருந்து பிரதிகளாய் உருவாகியிருப்பதால் நிகழ்த்துதலின் நுட்பங்களையும், மனோதத்துவங்களையும் எட்டுவதற்கு முயற்சி செய்திருக்கின்றன. நாடகத்தின் காலம், இடம் மற்றும் வெளியினை உருவகப்படுத்த பாடல், நாட்டியம் என்பன இணைத்திருப்பதும் இவற்றின் இன்னொரு அழகியல் அம்சமாகிறது. இவரது நாடகப்பிரதிகள் நம் கண் முன்னே ஒரு யதார்த்தத்தை, ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை முன் நிறுத்துகின்றன. 

பதினேழு ஆற்றுகைப்பிரதிகளை கேதீஸ் இந்த தொகுப்பில் இணைத்திருக்கிறார். முதலாவது உள்ள சகதிப்புழுக்கள் நாடகப்பிரதியானது அமானுஸ்ய மனிதர்களை பாத்திரங்களாக கொண்டு படைக்கப்பட்ட ஒன்று. இந் நாடகம் சாதியப்பிரச்சினைகளையும் அதற்கு எதிராக எழுந்த போராட்டங்களையும் கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

உயந்தவர் தாழ்ந்தவர் - என்ற
வேற்றுமை தோன்றலாச்சே
உன்னத மக்கள் கூட்டம்
உயிரற்ற பிணங்களாச்சே
சாதி என்னும் சட்டை போட்டு
சாக்கடையில் விழுந்த கூட்டம்
சாதித்த சாதனைகள்
சாவின் இருப்பிடங்கள் 

என நாடகப்பிரதியில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். சிறந்த நாடகப்பிரதிக்கான விருது, நெறியாளருக்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த ஒளியமைப்பாளருக்கான விருது, சிறந்த அரங்க முகாமைத்துவத்திற்கான விருது, சிறந்த இசையமைப்புக்கான விருது, சிறந்த நடிப்பின் நயனத்திற்கான விருது, சிறந்த ஒப்பனையாளருக்கான விருது என இந்நாடகம் அரச நாடக விழாவில் எட்டு விருதுகளைப்பெற்றது. சவப்பெட்டி எனும் நாடகம் வறுமையில் வாடும் மலையக மக்கள், சமூகத்தில் எதிர்கொள்ளும் பேராசை,
பொறாமை, மது போதை சுயநலம், அடக்கி ஆளுகின்ற தன்மை போன்ற பிரச்சினைகளை இது பேசுகிறது. 'சொந்த மண் விட்டு நாம் பொருள் தேடிப்போறோம் சொந்தங்களோடு நாம் வெளி தேசம் போறம்' என ஒரு இடப்பெயர்வின் வலியினை இது பதிவு செய்திருக்கின்றது. இதுவும் அரச நாடகவிழாவில் ஒன்பது விருதுகளைப் பெற்றிருக்கினறது. 

'பயணம்' நாடகமானது அனுமதியில்லாமல் அவுஸ்திரேலியா செல்வதால் ஏற்படும் இடர்பாடுகளைப் பற்றிப்பேசுகின்றது. அவுஸ்ரேலியா சென்ற கணவனை இழந்ததால் அவனது குடும்பத்தின் கையறு நிலையினை இது காட்டி நிற்கின்றது. இப்பிரதியில் மலையக மக்களின் வலி நிறைந்த பல்வேறுபட்ட வாழ்க்கையினையும் பதிவு செய்திருக்கிறார். இந்நாடகமும் அரச நாடக விழாவில் மூன்று விருதுகளைப்பெற்றுக்கொண்டது.
போதையெனும் மாயையினால் மனிதர் எதிர்கொள்ளும் அவலங்களைப்பற்றி 'மஜிக் பொக்ஸ்' எனும் நாடகம் பேசுகிறது. இந்நாடகம் இரு விருதுகளைப்பெற்றிருக்கின்றது. 'அரங்கைத்தேடி' எனும் நாடகப்பிரதி 'எத்தனை ஜென்மங்கள் நாங்களும் எழுந்து வரத்
துடிக்கின்றோம். முடியவில்லை.. தேடுகிறோம்..எங்களுக்கான அரங்கை..... வெளியை... என தமது சமூகத்துக்கான அரங்கைத்தேடும் தேடலாவுள்ளது. எல்லாளன் நாடகம் எல்லாளன் வாழ்க்கை வரலாற்றுடன் தற்கால அரசியல் பின்புலத்தை இணைத்து, வரலாறுகள் எவ்வாறு மாற்றியெழுதப்படுகின்றன என்பதை எம்முன் மிகப்பெரிய கேள்வியாக்குகின்றது. 'இத எழுதினா நாங்க எங்கட வரலாற்ற நிலைநாட்ட முடியாது. அம்மே.. இதிகாச புத்தகம் நம்மகையில நம்ம எழுதுரது தான் உண்ம எண்டு உலகம் நாளைக்கு சொல்லும்...' போன்ற வசனங்கள் வரலாற்றின் இருட்டடிப்புகளை வெளிக்காட்ட முயற்சி செய்திருக்கின்றன. 

'மண்டோதரிப்புலம்பல்' நாடகப்பிரதியானது பெண்ணொடுக்கு முறைக்கு எதிரான குரலாக அமைந்துள்ளது. 'நீ அதிகமாய் பேசுகிறாய். அந்தப்புரத்தில் இருக்க வேண்டிய நீ அரசவையில் இராவண அரசனுக்கே அறிவுரை கூறுகிறாய்' என்பது போன்ற வசனங்கள் இதனைப்பறைசாற்றி நிற்கின்றன. 'மனிதம் மீளுமா' எனும் நாடகப்பிரதி நவீனத்தினால் கிராமங்களில் ஏற்படும் அழகியல், பண்பாட்டுச்சிதைவு பற்றிப்பேசுகின்றது. 'தூக்குக்கயிறு' பிறவியில் அழகில்லாமல் முகத்தில் தழும்புகளோடு பிறக்கும் ஒரு குழந்தை, வளரும் போது சமூகப்பொதுவெளியில் என்னென்ன சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பது பற்றிய கதையாகும். வாழ்க்கை எனும் பிரதி தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினையான மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகி அவர்கள் கொழும்பில் பெரிய கடைகளிலும், மர ஆலைகளிலும், உணவகங்களிலும், கட்டிடங்கள் கட்டும்
வேலையிலும் இணைந்து கொள்ளும் அவலம் பற்றியது. கொழும்பில் வேலை செய்து இறந்து போன ஒரு சிறுவனின் உண்மைக் கதை இதில் பிரதியாக்கப்பட்டுள்ளது.

'மர்மம்' நாடகம் மர்மக்கொலைகள் நிறைந்தது. இறுதியில் கனவாக முடித்திருக்கிறார். 'சிறைகள்' நாடகம் அடக்குமுறை பற்றிப்பேசுகிறது. 'நிலந்தின்னும் பேய்கள்' நாடகப்பிரதியானது வேசப்பேய், யக்கா, சன்னி யக்கும என பேய்கள் எனும் குறியீட்டுப்பாத்திரங்களினூடாக தமது சுழலில் எவ்வாறு நில அபகரிப்பு நடைபெறுகின்றது என்பதை தெரிவித்திருக்கிறார். 'தாய்' நாடகமானது கஸ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிய பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தாயின் தவிப்பைக்காட்டுவதாகும். 'பாடை', சந்தோசமாக ஆடிப்பாடி குதூகலமாக வாழும் ஒரு சிறுமி சிறுவர் இல்லத்தில் விடப்படுகிறாள். அங்கு அச்சிறுமி எதிர்கொள்ளும் துயரத்தினை நாடகப்பிரதியாக்கியிருக்கிறார்.

'மாயன் நாட்காட்டி' நாடகப்பிரதியானது சுவாரயஸ்யமான கதையோட்டத்துடன் இருக்கும் அதே வேளை உலகமயமாக்கலின் அபத்தங்களையும் சுட்டிக்காட்டுகின்றது. 'உயிர் எடுக்கும் எமராஜன் உலகம் காண வந்தவன். உலகமயமாதல் கண்டு உருண்டெழுந்து வியக்கிறான். பிரம்மச்சுவடி தேடிவந்த எமலோக கூட்டம் இங்கு பிரம்மச்சுவடி மறந்து விட்டு டுயிவழி ஐ பார்க்குதே...' என நகைச்சுவையாக இக்காலத்தின் போக்கற்ற தன்மைகளை தோலுரித்துக்காட்டுகிறார்.

மொத்தத்தில் ஒரு எந்திர உலகம் மனிதனின் பசுமையான வாழ்க்கையையும் அவனது சந்தியையும் சேர்த்து நசுக்கிக் கொண்டிருக்கிறது. அவன் ஒரு நுகர் பொருளாக உலவிக் கொண்டிருக்கிறான். நாடகம் அவனுடைய கற்பனைகளை, வாழ்வை மீட்டெடுக்க முடியும். அல்லது தீர்ந்து போன சிதைந்து கொண்டிருக்கிற ஒரு காட்சியை அவனுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தான் நின்று நிதானித்து செல்வதற்கான திசைகளை வசப்படுத்த முடியும், யதார்த்தத்தின் முன் அவனை வீறு கொள்ள வைக்க முடியும். கற்பனையற்ற அவனுடைய வாழ்க்கையை இன்னும் அதிக கற்பனையுடன் இன்னும் அதிக படைப்பு மனத்துடன் அவனை எதிர்கொள்ளச்செய்ய முடியும் என இருப்பிற்கும் இருப்பின்மைக்கும் இடையில் இருக்கிற வெளியில் நின்று அர்த்தங்களை கட்டவிழ்க்க முயற்சி செய்திருக்கின்றன. கேதீசின் இந்த நாடகப்பிரதிகள், இடைவெளிகளால் நிறைந்திருக்கிற காலக் கணக்கு அலைக்கழிக்கும் நியதிகளிலிருந்து தக்கவைக்கப் போராடுபவைகளாக அமைந்துவிடுகின்றன. 
காட்சிகள் பல காட்டிக்கொடுத்துவிடும் அசௌகர்யத்தின் மேல் நிற்க அவதியுறும் ஒரு படைப்பாளி தான் நடக்க முயலும் பாதையின் வழியே பதம் பார்க்கும் நெருஞ்சிகளையும் நெருப்புக்குழிகளையும் நடந்ததின் வழியாய்கண்டெடுத்து காட்சியாக்கியிருக்கிறார். தான் வாழும் சமூகத்திற்கான பிரியங்களை சமைப்பதென்பது ஒரு பெரும் பசிக்கோ அல்லது தேடலுக்கு பின்னதாய் நிகழும் போதோ அது அமைத்துத் தருகிற தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொள்வது கிட்டதட்ட ஓர் உயிர் தவம். இவர் துயரங்களின் பெருமூச்சுச் சுவாலைகளிலிருந்தே எல்லோருக்குமான பிரியங்களை சமைக்க முயன்றிருக்கிறார். இந்த வலிகள் நிறைந்த பெருமூச்சுக்களை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றோம் தற்போதைய நம் பாதச்சுவடுகளின் திசைகளை தெரிந்து கொள்வதற்காக...

No comments

Powered by Blogger.