மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்!!

                                                                                   - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஆலோசனைக்கமைய சுகாதார சேவைகள் திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றது.

இதற்கமைய அரச பணியார்களை இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பொருட்டு விழிப்பூட்டும் செயலமர்வொன்று புதன்கிழமை (30 ) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிரேஸ் நவரட்ணராஜா, மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி டாக்டர்.கே.நவலோஜிதன், மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட அரச பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர் .

இக்கூட்டத்தில் இம் மாவட்டத்தின் தற்போதைய டெங்கு நோய் நிலைமைகள் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளை பற்றியும் மாவட்ட அரச பணியாளர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டதுடன் இந்தத் தடுப்பு நடவடிக்கையில் இரு தினங்கள் அரச பணியாளர்களை ஈடுபடுத்தும் பொருட்டு தேவையான திட்டமிடல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட செயலக அரச ஊடகப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.

இதே வேளை இம் மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கங்கள் பற்றி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் தருகையில் இன்று வரை இவ் வருடத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிபிரிவுகளில் 2876பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த வாரம் மாத்திரம் 176 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாகவும் மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று மத்தி, மற்றும் மண்முனை தென் எருவில் பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காத்தான்குடி , மண்முனை தென் மேற்கு வைத்திய அதிகாரி பிரிவுகளில் மாத்திரம் கடந்த வாரம் எவ்வித டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதே நேரம், தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகளும் புகை விசிறுதல், வீட்டுக்கு வீடு பரிசோதித்தல் , துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், பொது அறிவித்தல் மற்றும் டெங்கு நோய் பாதிப்புக்களுக்குக் காரணமாக இருக்கும் பாத்திரங்களை அகற்றும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக அமுல் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பிரிவுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பேரில், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் அரசாங்க சேவை உத்தியோகத்தர்களின் உதவிகளையும் பெற்றுக் கொண்டு இம்மாவட்டத்தில் டெங்கு நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிரேஸ் நவரட்ணராஜா அரசாங்க ஊடகப்பிரிவுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.