செல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா? உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை!!

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மட்டும் ஒருவருடைய கடமையல்ல அவற்றிற்கான தடுப்பூசிகளையும் காலத்துக்கு காலம் மிருக வைத்தியசாலையினை அணுகி தடுப்பூசிகளை இட வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவற்றின் தாக்கத்தால் மனித மரணங்களும் ஏற்பட வாய்புண்டு அந்த வகையில் இன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற துக்ககரமான உண்மை நிகழ்வினையும் அதிலிருந்து பாதுகாக்கும் முறைகளை வைத்திய அத்தியட்சகர் Dr.சுகுணண் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து மக்களின் நன்மை கருதி பதிவிடுகிறோம்!
இன்று சக வைத்தியரான ஒருவரின் பதிவிலிருந்து என்னை எழுத தோன்றியது.

அறியாமை காரணமாக ஒரு குடும்பஸ்தர் விசர் நாய்க்கான சிகிச்சையை தவற விட்டு வாழைச்சேனைபகுதியில் விசர் நோய்க்கு உள்ளாகியுள்ளார். இன்னும் இரு தினங்களில் அவர் இறப்பது நிட்சயம்.

Rabies அல்லது Hydrophobia எனப்படும் இந்த விசர்நோய் வருத்தமானது விசர்நோயால் தொற்றான நாய்கள் கடிப்பதினால் அதிகமாக மனிதர்களுக்கு வந்தாலும் வேறு மிருகங்கள் மூலமோ காட்டு எலி கடியின்மூலமோ ஏற்படலாம். மிருகமொன்றினால் கடிக்கப்பட்டால் சவர்க்காரத்தினால் கழுவியவுடன் அருகிலோ தொலைவிலோ உள்ள வைத்தியசாலைக்கு சென்று தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும். நாயோ பூனையோ விசர் தொற்றுள்ளதாயின் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். கடிபட்டபின் நாம் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாது எமக்கு இந்த விசர் நோய் வந்தால் இறப்பு நிட்சயம் ஏனெனில் வந்தபின் சுகமாக்கக்கூடிய சிகிச்சை முறைகள் Rabies இற்கு கண்டுபிடிக்கைப்படவில்லை.

இந்த தடுப்பு மருந்துகள் மட்டக்களப்பில் உள்ள பெரிய வைத்தியசாலைகள் அனைத்திலும் காணப்படுகின்றன. 

நாய் வளர்ப்பவர்கள் நாய்களுக்கு தடுப்பூசி இடுவதும் வீதி நாய்களை கட்டுப்படுத்துவதும் தடுப்பதற்கான சிறந்த முறைகள்.

நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வைத்தியர் திரு தட்சிணாமூர்த்தி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.....இன்று காலை 11மணியளவில் வாழைச்சேனைப் பகுதியில் ஒரு பிரத்தியேக வைத்திய நிலையத்தில் கடமை பார்த்துக் கொண்டிருந்த வேளை ஒரு மனைவி தன் கணவரை ஓமடியாமடுவிலிருந்து சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தார்.அந்த நோயாளியைப் பார்த்தபோது நீண்ட நாட்கள் நரம்பு தசைகள் இயங்காமல் இருப்பதுபோலக் காட்சியளித்தார்.நான் எதுவும் கேட்காமலே மனைவி நான் ஒரு மருந்து கொடுக்கும் மருந்துக் கலவையாளர் என்று நினைத்துக்கொண்டு இவர் நேற்று முதல் ஒன்றும் சாப்பிடவுமில்லை, குடிக்கவுமில்லை சவுப்பாக இருக்ககிறார்,இரண்டு அல்லது மூன்று போத்தல் சேலையின் போட்டு ஊசியும் போடணும்,நடக்கவும் கஷ்டமாக உள்ளது என்று அடுக்கிக் கொண்டே இருந்தாள்.

சீலிங் காற்றாடி வேலை செய்கின்றதால் வரும் காற்றை கண்டு பயப்பட்டுக் கொண்டிருந்தார்.

நான் நாய் பூனை ஏதாவது கடித்ததாஇந்தநாட்களில் என்று கேட்க ஆமாம் ஐயா மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு குட்டிநாய்தான் கடித்தது என்றும் அதற்கு விசர்இல்லை சின்னக் குட்டி நாய்தான், நாங்கள் வளர்த்த நாய்க்குட்டி என்றார்.

அப்போது நாய் இன்னும் உயிருடன் இருக்கிறதா என்று கேட்க இல்லை அது தானே இறந்துவிட்டது என்றார்.

உடனே என் மனம் சஞ்சலப் படத்தொடக்கியது .

அவரை வெளியில் அனுப்பி விட்டு மனைவியிடம் காப்பாற்ற முடியாத அளவிற்கு நோய் முற்றிவிட்டது.இனி சிகிச்சை பயனளிக்காது,நாய் கடித்தவுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் தடுக்கும் ஊசி மருந்து ஏற்றி நூறு வீதம் காப்பாற்றிருக்கலாம். இனி காப்பாற்ற முடியாது, வாழைச்சேனை வைத்திய சாலைக்குச் சென்று அனுமதியுங்கள் என்று அனுப்பிவிட்டேன்.


No comments

Powered by Blogger.