சற்குரு நாதர் மகா யோகி திரு.சி.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் அவதார தினம்!!


புண்ணிய பூமியாம் இலங்கை கிழக்கிலே படுவான் கரைப் பிரதேசமான கன்னன்குடா கிராமத்தில்  கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி பாலாத்தை தம்பதிகளார் மட்டு மாமாங்கேஸ்வரரிடத்தில் தீவிர விரதமிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியிரண்டாம் ஆண்டு ஆவணி மாதம் மூன்றாம் திகதி(1962/08/03) இறைவன் அருளால் அருட் குழந்தையாக அவர்களுக்கு அவதரித்தவர்தான் ஆன்மீகக் குரு மகா யோகி சி.புண்ணியரெத்தினம் சுவாமிகள்.

சிறு குழந்தையில் பல சந்தர்ப்பங்களிலே இறையருள் நிறைந்தவராக காணப்பட்டதாக அவரை அண்டியவர்கள் மூலம் அறிய முடிந்தது; காலச் சுழற்சியில் இறைவன் தனது சத்திய சோதனையினை ஆரம்பித்து உலகின் விடி விளக்கினை புடம் போட ஆரம்பித்தார் இந்த சோதனைகளின் போது இறை சிந்தனையை ஒரு போதும் கைவிடாது உலக மக்களின் உய்வுக்காக காயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் அன்புக்குரிய முதன்மைச் சீடரானார் ஆனால் முருகேசு சுவாமிகள் தனது உன்னத சீடனை உலகிற்கு அடையாளம் காண்பிக்கவில்லை காரணம் ஆன்மீகம் ஆன்மீகவாதி என்பவர்களை இனங்காட்டுவதும் அடையாளப் படுத்துவதும் போலியானதொன்று போலிக்குத்தான் விளம்பரங்கள் தேவை உண்மையினைத் தேடி உண்மையானவர்கள் கண்டிப்பாக வந்தே தீருவார்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் தன்னையும் அடையாளம் காண்பிக்காத முருகேசு சுவாமிகள் அகஸ்தியரை மூல குருவாக கொண்டு கண்ணையா யோகீஸ்வரரை தனது குருவாக கொண்டு நான்காவது தலைமுறை சீடராக மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளை தனது ஆன்மீக வாரிசாக மகா சக்தி பொருந்தியவராக மறைமுகமாக வளர்த்தெடுத்தார். 

காயத்திரி மந்திரத்தினை உலக மக்களின் உய்வுக்காக போதித்து ஆன்மீக அருளுபதேசங்களை அருளி தர்ம வழியினை தனது குருநாதரின் அடிச் சுவட்டினை பின்பற்றி எந்த விளம்பரங்களுமின்றி பெயர் புகழுக்கு அப்பாற்பட்டவராக இருந்து எதையும் எதிர்பாராமல் தன்னலம் விடுத்து தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு பல தியான பீடங்களை அமைத்து நல்வழி காட்டி வருகிறார்.

இன்று சுவாமிகளின் 56ஆவது அவதார தினம் உலகெங்கிலுமுள்ள  பக்தர்களால் பக்திபூர்வமாக விசேட வழிபாடுகள் மட்டு ஸ்ரீ பேரின்ப ஞானபீடம், களுவாஞ்சிகுடி ஸ்ரீ யோக ஞான பீடம்,  மண்டூர் பாலமுனை ஆத்மஞான பீடம், நாப்பதாம் கிராமம் வம்மியடியூற்று,கல்முனை, தாண்டியடி, மற்றும் இலங்கை உலகெங்கிலும் உள்ள பிரார்த்தனை கூடங்கள் அனைத்திலும் இன்று பிற்பகல் 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குருவருளும் இறையருளும் வேண்டி நிற்கும் பக்தர்கள் இந்த சக்தி வாய்ந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து குருவருளையும் இறையருளையும் பெற்றுய்யலாம்.
" ஓம் நமோ பகவதே புண்ணிய ரெத்தினாய ஓம் புவன லோக ஈஸ்வராய நமக"No comments

Powered by Blogger.