காயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் 11 ஆவது சமாதி தின பூஜையும் பௌர்ணமி மகா யாகமும்!!

மட்டக்களப்பு மண்டூர் பால முனையில் அமைந்துள்ள மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தின் கிளையான ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் எதிர்வரும் பூரணை தினமான திங்கட்கிழமை அதாவது 24/09/2018 அன்று மகா சமாதியடைந்த பஹவான் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் பதினோராவது ஆண்டு சமாதி தின மற்றும் உலக சேமத்துக்கான சிறப்பு மகா யாகம் முருகேசு சுவாமிகளின் சீடரான ஆன்மீகக் குரு மகா யோகி திரு எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் நடை பெறவுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பள்ளேகலையில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே ஈஸ்வரப்பட்டர் மகரிஷியின் ஆன்மீக அருளாசி பெற்று பின்னர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்று குடும்ப சுமை ஏழ்மை காரணமாக கடையொன்றில் கணக்காளராக வேலையில் சேர்ந்து கஸ்ரப்பட்டாலும் அவரது ஆன்ம தாகம் அருட் பசி இந்தியாவரை அழைத்துச் சென்றது.

அங்கு மூல குரு அகஸ்தியரின் நேரடி ஆசியும் அருட்கடாட்சமும் பெற்று ஈற்றில் அவரின் உத்தரவின் பேரில் கண்ணையாயோகி மகரிஷியினை குருவாகப் பெற்று அவரிடம் ஆன்மீக சாதனைகள் பயின்று தனது அவதார நோக்கம் புரிந்து குரு தேவரின் ஆசியுடன் தாய்த் திருநாட்டில் நுவரெலியாவில் பாதம் பதித்து இந்திரஜித் தவம் புரிந்த இடத்தில் காயத்திரி ஆலயம் அமைத்து சிவபாலயோகி மகரிஷினால் பாண லிங்கமும் பிரதிஸ்டை செய்தார்.

அதன் பின்னர் தனக்குரிய சீடர் மட்டக்களப்பில் உள்ளதை ஞானத்தால் உணர்ந்து மட்டு மண்ணில் கால் பதித்தார் காரணத்தை உருவாக்கி காரியத்தை நிறைவேற்ற காயத்திரி சித்தர் மட்டு நாவலடியில் சப்தரிஷி ஆலயம் மகா மேரு ஆலயம் அமைத்தார் அவருடைய நோக்கம் உலகத்தில் ஏற்படவிருக்கும் இயற்கை அழிவுகளை தடுத்து மக்களை நல்வழி வாழச் செய்வதே அவரின் பிரதான நோக்கம்.

தன்னையொரு அவதார புருஷர் என்பதனை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் வெளிக்காட்டவில்லை அதே போன்று தனது சீடரையும் அறிமுகம் செய்யவில்லை அடிக்கடி அவர் கூறுவார் "சித்தன் ஞானி மகரிஷி இறைவன் அனைத்துமே உள்ளுக்குத்தான் அப்பா ரெத்தினம் போன்ற குரு உங்களுக்கு வழிகாட்ட வர வேண்டும்" என்று காயத்திரி அன்னையிடம் பிரார்த்திப்பதாகவும் கூறுவார்.

சூட்சுமம் புரியாத மக்கள் இதை அறிந்து கொள்ளவுமில்லை புரிந்து கொள்ள முயற்சிக்கவுமில்லை அவரை ஒரு சாதாரண ஆலய பூசகராகவும் சாஸ்திரியார், மாந்திரீகர் என்ற அளவிலேயே சிந்தித்தார்கள்; ஒரு நாள் பௌர்ணமி யாகத்தில் யாகம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது முருகேசு சுவாமிகள் தன்னையும் தன் விஷ்வரூபத்தினையும் காண்பித்தார் அவ்வேளையில் அவரது முதன்மை சீடர் ஆத்ம சக்தி வெளிப்பட்டு தன் குரு நாதரின் தெய்வீக திருக்கோலம் கண்டு கதறி அழுதார் உலகிற்கு உரக்கக் கூறினார் "மகா புருஷர் மகா விஷ்ணு காயத்திரி அன்னை வந்துள்ளார் அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்" என்று ஒற்றைக் கால் கட்டை விரலில் நின்று இரு கைகளையும் தூக்கி விஷ்வரூபத்தினை தரிசித்து கதறினார்.

அவர்தான் இன்று மகா யோகி எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளாக மக்கள் பாவங்கள் தீர்க்க முருகேசு சுவாமிகள் அடிக்கடி கூறியதைப் போன்று ரெத்தினம் போன்ற குருவாக இருந்து குரு இட்ட கட்டளையினை சிரம்மேற் தாங்கி இந்த ஆன்மீகப் பணியினை எந்த விதமான எதிர்பார்ப்புகளுமின்றி உலக சேமத்துக்காக

இந்த தெய்வீகத் திருப் பணியினை முருகேசு சுவாமிகள் தன்னை அண்டி வந்த பக்தர்களை மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் நினைக்கிறார்களோ அங்கெல்லாம் சூட்சுமமாகவும் ஸ்தூல சரீரத்திலும் காட்சி கொடுத்து காத்தருளினாரோ அதே போன்று புண்ணியரெத்தினம் சுவாமிகளும் காத்தருள்வதை இலங்கை மட்டுமல்ல உலக மக்களும் தற்போது உணர்ந்து வருகிறார்கள்.

மனிதன் ஏன் துன்பப்படுகிறான் வாழ்வின் அர்த்தம் புரியாமல் பதறி தவித்து நோய்களின் பிடியில் ஏன் சிக்கித் தவிக்கிறான் இவற்றிலிருந்து விடுபட என்ன வழி ஆன்மீகம் லௌகீகம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன விஞ்ஞானம் மெய்ஞானம் இவற்றின் வித்தியாசங்கள் என்ன கடவுள் என்பவர் யார் எங்கிருக்கிறார் பிரபஞ்ச சக்திகளை எவ்வாறு மனிதன் உள்ளீர்த்து தன்னை அறிந்து தன்னை இயக்கும் தலைவனை அறிவது இவ்வாறு மறைக்கப்பட்ட குப்த வித்தைகளையும் ஆன்மீக அரிய பொக்கிஷங்களையும் தற்போது மிக தெளிவான உபதேசங்கள் மூலம் பாமரருக்கும் புரியும் வகையில் பல ஆன்மீகஸ்தலங்கள் அமைத்து எந்த வித எதிர்பார்ப்புக்களோ விளம்பரங்களோ ஆடம்பரமோ இன்றி தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க தன் குருவிடமிருந்த அசைக்க முடியாத பக்தியினால் தன்னை அறிந்துணர்ந்து தலைவனைக் கண்டு ஆணித்தரமான போதனைகளை இன்றுவரை போதித்து நல்வழிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

மக்கள் பலர் போலிகளுக்குள் சிக்குண்டு ஏமாற்றமடைந்ததன் காரணமோ என்னவோ உண்மையான உண்மைகளையும் நம்ப மறுக்கின்றனர் ஆனால் உண்மை என்பது ஒரு போதும் மறைந்திருக்காது என்றாவது ஒரு நாள் வீரியமாக வெளிப்பட்டே தீரும்.

பல கூனிகளும் சகுனிகளும் நிறைந்த இவ்வுலகில் அவதாரம் ஒன்று இல்லாமலா போயிருக்கும் அந்த இன்பத்தை அனுபவித்து பேரின்ப நிலையினை அடைவதற்கு எண்ணினாலேயே போதும் இறைவனே குருவாக வருவார் மாணிக்கவாசகருக்கு வந்தது போல இல்லையேல் தகுந்த குருவினை அனுப்பியே தீருவார் களியாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய மக்கள் சமுதாயம் வழிபாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மருவிப் போய்விட்டது கவலைக்குரிய விடயம் எம் பாராம்பரிய பண்பாட்டினை எம் வழிபாட்டு முறைகளை உணர்ந்து எவ்வாறு வழிபடுவது என்பதனை உணர்த்துவதே சற்குரு நாதரின் எண்ணம் செயல்.

தேடி வந்திருக்கும் ஒரு தெய்வத்தினை வேண்டாம் திரும்பிப் போய் விடுங்கள் நாம் அழிவைத்தான் விரும்புகிறோம் என்று மக்கள் இன்றைய செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு இசைவாக இயற்கையும் தனது அதிர்வுகளை மெதுவாக ஆரம்பித்துள்ளது ஆங்காங்கே நில அதிர்வு சுனாமி என ஆன்மீகம் உயர்ந்தால் இயற்கை தன் சீற்றத்தை குறைத்து மக்கள் சுகமாக வாழ வழிகொடுக்கும் இல்லையேல் உலக அழிவிலிருந்து மக்கள் தப்பிப்பதென்னவோ மிகக் கடினமே.

கடவுள் நமக்கு தர வந்தவரே அவரே இந்த உலகின் மிகப் பெரிய பணக்காரர் அவருக்கு உண்டியலில் பிச்சையிடும் நாம் எவ்வளவு ஏழைகள் என்பதை உணருங்கள் அந்த வகையில் சற்குரு நாதர் புண்ணியரெத்தினம் சுவாமிகளோ அல்லது அவரது குரு நாதர் முருகேசு சுவாமிகளோ எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களால் ஸ்தாபிக்கப் பட்ட ஆலயங்களிலோ ஆசிரமங்களிலோ உண்டியலோ காணிக்கைகளோ செய்வதை அனுமதிக்கவில்லை கடவுளிடம் கேட்டுப் பெற நாம் தயங்க வேண்டியதில்லை மக்கள் உணர வேண்டும் இயற்கை அழிவுகளில் இருந்து மக்கள் தன்னையும் காத்து தன் மனித இனத்தையும் காப்பதற்கான தொடர் யாகங்கள் பிரார்த்தனைகள் என்ற வகையில் சுவாமிகள் எதிர்கால உலக நிலையினை தன் கண் முன்னே ஞானத்தால் கண்டுணர்ந்து அவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற திடம் பூண்டு ஊடகங்கள் மூலமாக கூவியழைத்தவண்ணமேயுள்ளார்.

தன் குருவின் பதினோராவது சமாதி தினத்தினை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் சனிக்கிழமை (23.09.2018) மாலை 6.00 மணிக்கு மிக சக்தி வாய்ந்த சஞ்சீவினி மூலிகைகளுடன் அபிசேகத்திரவியங்கள் நிரப்பப்பட்ட1008 சங்குகள், 108 பூரணகும்பங்கள் என்பன வைக்கப்பட்டு, பக்தர்களினால் இரவு முழுவதும் இடைவிடாது1008 தடவைகள் காயத்திரி மஹா மந்திர பாராயணம் செய்யப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி பிரம்ம முகூர்த்த வேளையில் பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பூரண கும்பம் மற்றும் சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த அபிஷேக திரவியங்கள் கொண்டு பக்தர்களின் கரங்களினாலேயே திருப்பாத அபிஷேகம் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து திங்கள் காலை 10.00 மணிக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த 108 உயிர் மூலிகைகள் கொண்டு, பீடத்தின் குரு சித்தர் மகாயோகி ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளினால், குருபரம்பரையினரான மூலகுரு அகஸ்திய மாமகரிஷி, அருட்திரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகி மகரிஷி, மகா அவதார புருஷர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் அவர்களுடன் சப்தரிஷிகள், பதிணெண் சித்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷி முனிவர்களின் அருள் வேண்டி உலக சேமத்திற்கான மகா யாகம் நடைபெறவுள்ளது. மகாயாகத்தினைத் தொடர்ந்து ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஆன்மீக அருளுபதேசம், ஆசீர்வாதம் என்பன நிகழ்த்தப்பட்டு, அன்னதானமும் இடம்பெறும்.

மகா சமாதி தின பிரார்த்தனை வழிபாடுகளில் இந்தியாவிலிருந்து யோகிராம் சூரத் குமார் சுவாமிகளின் சீடர்கள் மற்றும் உலகெங்கிலுமிருந்தும் பக்தர்கள் பலரும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இந்த சிறப்பு வாய்ந்த நன் நாளிலே அனைத்து பக்தர்களும் கலந்து பிரார்த்தித்தால் சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழலாம்.

No comments

Powered by Blogger.